ராகுலுக்கு மீண்டும் தலைவர் பதவி: சோனியாவிடம் எம்பிக்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த மக்களவை எம்பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில், ராகுல் காந்தி மீண்டும் தலைமை பொறுப்பேற்க எம்பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து மக்களவை எம்பி.க்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நாட்டில் கொரோனா பாதிப்பை அரசு  கையாளும் விதம், லடாக் எல்லை பிரச்னை, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்னையை கிளப்ப முடிவு செய்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடா கே. சுரேஷ், ராகுல் காந்தி மீண்டும் கட்சியின் தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்று முன் மொழிந்தார். இதனைத் தொடர்ந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டத்தில் பங்கேற்ற எம்பி.க்கள் அனைவரும் இதனை வழிமொழிந்தனர்.

பொய் பேசி நாட்டை ஏமாற்றுகிறார் மோடி

கூட்டத்தில் பேசிய ராகுல், சீனா விவகாரத்தில், இது அரசியல் பிரச்னை அல்ல என்று பிரதமர் மோடி தொடர்ந்து பொய் பேசி நாட்டை ஏமாற்றி வருகிறார். நாட்டின் எல்லை, பாதுகாப்பை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கைக்கும் காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்’’ என்று கூறினார்.

Related Stories: