ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியா? அதிமுக மூத்த எம்பிக்கள் போர்க்கொடி: பாஜ தரப்பிலும் கடும் எதிர்ப்பு

சென்னை: மத்திய அமைச்சர் பதவியை ராஜ்யசபா மூத்த எம்பிக்களுக்கு  வழங்கவேண்டும். இளையவரான ரவீந்திரநாத்துக்கு வழங்கக் கூடாது என்று மூத்த  எம்பிக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.டெல்லியில் நேற்று மாலை பாஜ  கூட்டணி எம்பிக்கள் கூட்டமும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டமும்  மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி  பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர்.  அப்போது, ரவீந்திரநாத்குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுக்க  ஓபிஎஸ் தனியாக மோடியை சந்தித்து பேசினார். அதேபோன்று தற்போது அதிமுக  மாநிலங்களவை எம்பியாக உள்ள ஒரு சிலருக்கு அமைச்சர் பதவி கேட்டு  எடப்பாடியும் வலியுறுத்தினார். நாடு முழுவதும் நடைபெற்று  முடிந்த 542 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 23ம் தேதி  எண்ணப்பட்டது. இதில் பாஜ 302 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக  உள்ளது. பாஜ கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 350 இடங்களில் வெற்றி  பெற்றுள்ளது. தனிப்பெரும் கட்சியாக பாஜ உருவெடுத்துள்ளதால், கூட்டணி  கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி  எழுந்துள்ளது.அதேநேரம் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து  போட்டியிட்ட பாஜ 5 இடங்களிலும் படுதோல்வி அடைந்தது. அதிமுக மற்றும் அதன்  கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட 38 தொகுதிகளில் தேனி தொகுதியில் மட்டும்  ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் குறைந்த வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அனைவரும் தோல்வியை தழுவினர்.

இந்நிலையில்,  மோடி தலைமையில் நேற்று மாலை 5.30 மணிக்கு டெல்லியில் நாடாளுமன்ற கட்டிட  வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாஜ  மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் கூட்டம் (ஆட்சி மன்ற கூட்டம்)  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜ தலைவர் அமித்ஷா, பாஜ மூத்த தலைவர்கள்  மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்  பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் நேற்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து  திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். இவர்களுடன் ஓபிஎஸ் மகனும், தேனி  தொகுதி அதிமுக எம்பியுமான ரவீந்திரநாத் குமாரும் சென்றார். இவர்கள், நேற்று  மதியம் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்தனர். பின்னர்  5.30 மணிக்கு மோடி தலைமையில் நடைபெற்ற புதிய எம்பிக்கள் கூட்டத்தில்  பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், அனைத்து எம்பிக்களும் ஒருமனதாக, மோடியை  பிரதமராக தேர்வு செய்தனர். இதையடுத்து, நாட்டின் 17வது நாடாளுமன்றத்தின்  பிரதமராக மோடி இன்னும் ஒரு சில நாட்களில் பதவியேற்கிறார்.இந்த கூட்டம்  முடிந்ததும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.  அப்போது, ஓபிஎஸ் தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம்அளிக்க வேண்டும்  என்று மோடியிடம் கேட்டுக் கொண்டார். அதேபோன்று, தற்போது அதிமுகவில்  மாநிலங்களவை எம்பியாக உள்ள ஒன்று அல்லது 2 பேருக்கு அமைச்சர் பதவி  வழங்கி, தமிழகத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதல்வர்  எடப்பாடியும் கோரிக்கை வைத்தார்.ஆனால், பாஜ சார்பில் தமிழகத்தில் ஒரு  எம்பி கூட தேர்வு செய்யப்படாத நிலையில், வடமாநில பாஜ தலைவர்கள் கோபத்தில்  உள்ளனர். அதனால் தமிழகத்துக்கு அமைச்சர் பதவி உள்ளிட்ட எந்த  முக்கியத்துவமும் அளிக்கப்பட மாட்டாது என்றும் கூறப்படுகிறது. அதேநேரம்,  தமிழகத்தில் அடுத்த மாதம் மாநிலங்களவை தேர்தல் நடக்க உள்ளது. அப்போது  அதிமுக சார்பில் பாஜவை சேர்ந்த ஒருவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்க  வேண்டும். அவருக்கு தற்போது அமைச்சர் பதவி வழங்க திட்டமிட்டுள்ளது  பற்றியும் மோடி மற்றும் அமித்ஷா சார்பில் முதல்வர் எடப்பாடியிடம்  வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேநேரம், தமிழக பாஜ சார்பில்  டெல்லி மேலிடத்துக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் அதிமுகவால்  பாஜவுக்கு எந்த பயனும் இல்லை. பாஜவின் தயவால்தான் அதிமுக ஆட்சியே  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால், அதிமுகவில் யாருக்கும் அமைச்சர் பதவி  வழங்க கூடாது என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இவ்வளவு  எதிர்ப்பையும் மீறி ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது  சந்தேகம்தான். அதேநேரம், அதிமுக மாநிலங்களவை எம்பியாக வைத்திலிங்கம்,  நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உள்ளனர். இவர்கள் அதிமுகவின் மூத்த  தலைவர்களாக உள்ளனர். அவர்களும் அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி  தூக்கியுள்ளனர். இதனால் மூத்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்காமல், முதல்  முறையாக வெற்றிபெற்றுள்ள ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கினால்  அதிமுகவில் உள்கட்சி மோதல் வெடிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற  பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவே, அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுமா?  இல்லை கழட்டி விடப்படுமா? என்பது மோடியின் கையில்தான் உள்ளது. இதற்கு  இன்னும் ஒரு சில நாட்களில் பதில் கிடைக்கும்.டெல்லி சென்ற முதல்வர்  எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத்  குமார் ஆகியோர் நேற்று கூட்டம் முடிந்தவுடன் உடனடியாக சென்னை  திரும்பவில்லை. டெல்லியிலேயே ஒரு சில நாட்கள் தங்கி இருந்து தங்களின்  கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளனர். மோடி பிரதமராக  பதவியேற்கும் வரை டெல்லியிலேயே தங்கி இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

தேமுதிக விலக திட்டம்?

மக்களவை  தேர்தலில் வெற்றி பெற்ற பாஜ மற்றும் அதன் கூட்டணி எம்பிக்களின் கூட்டம்  நேற்று மாலை டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில்  இருந்து கூட்டணி கட்சி தலைவரான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக சார்பில் அன்புமணி, தமாகா தலைவர்  ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோரும் டெல்லி  சென்று கூட்டத்தில் பங்ேகற்றனர். ஆனால், கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக  தலைவர் விஜயகாந்த்தோ அல்லது பிரேமலதாவோ நேற்று டெல்லிக்கு செல்லவில்லை.  அதேநேரம் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன் நடந்த பாஜ கூட்டணி கட்சி  தலைவர்கள் கூட்டத்தில் தேமுதிக சார்பில் பிரேமலதா கலந்து கொண்டார். வாக்கு  எண்ணிக்கையில் தேமுதிக போட்டியிட்ட 4 தொகுதியிலும் படுதோல்வி அடைந்தது.  அதனால் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையா அல்லது மக்களவை  தேர்தலுக்காக அதிமுக மற்றும் பாஜவுடன் அமைத்த கூட்டணியில் இருந்து தேமுதிக  வெளியேறி விட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தேமுதிக சார்பில்  அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

Related Stories: