எம்ஜிஆர் சிலையை மூடிய துணி அகற்றம் அமைச்சர், எம்பி முன்னிலையில் அதிமுகவினர் தேர்தல் விதிமீறல்: சிவகங்கையில் பரபரப்பு

சிவகங்கை: சிவகங்கையில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததையடுத்து எம்ஜிஆர் சிலை துணியால் மூடப்பட்டது. துணியை அகற்றி எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கையில் பஸ் ஸ்டாண்ட் முன்பு எம்ஜிஆர் முழு உருவச்சிலை உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததையடுத்து தேர்தல் அதிகாரிகள், எம்ஜிஆர் சிலையை துணியால் மூடினர். மானாமதுரை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாகராஜன் நேற்று சிவகங்கை வந்தார். அப்போது எம்ஜிஆர் சிலையை மூடியிருந்த துணியை நகராட்சி முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அகற்றினர். அங்கு வந்த பறக்கும் படை தாசில்தார் கண்ணன் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் அகற்றக்கூடாது என தெரிவித்தனர்.

தலைப்பகுதியில் இருந்து இடுப்பு பகுதி வரை பாதி துணி அகற்றிய நிலையில், எம்பி செந்தில்நாதன், நகரச் செயலாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்போது அமைச்சர் பாஸ்கரனும் அங்கு இருந்தார். இதுதொடர்பாக சிவகங்கை டவுன் போலீசார், அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தால் மூடப்பட்ட துணியை அதிமுகவினர் அத்துமீறி அகற்றி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: