கத்திமுனையில் காவலாளியை கட்டிப்போட்டு 35 லட்சம் தையல் மெஷின்கள் கொள்ளை: லாரியில் தப்பிய கும்பலுக்கு வலை

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டை, 15வது தெருவில்  தையல் மெஷின்  விற்பனை செய்யும் குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு வெளிநாடுகளிலிருந்து உயரக தையல் மெஷின்கள் மும்பை வழியாக கொண்டு வரப்படுகின்றன. பின்னர், குடோனில் வைக்கப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதியிலுள்ள எக்ஸ்போர்ட் நிறுவனங்களுக்கு ஆர்டரின் பேரில் விற்பனை செய்யப்படுகிறது. இக்குடோன் பொறுப்பாளராக சென்னை மதுரவாயலை சேர்ந்த ரவிச்சந்திரன் (53) என்பவர் உள்ளார். இதன் உரிமையாளர் மும்பையில் வசித்து வருகிறார். இங்கு ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், கிழக்கு தென்றல் நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (61) என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் விஜயகுமார் பணியில் ஈடுபட்டிருந்தபோது இரவு 11 மணியளவில் 5க்கும் மேற்பட்டோர் குடோனுக்குள் புகுந்தனர். பின்னர் காவலாளி விஜயகுமாரை மிரட்டி ஒரு அறையில் கை, கால்களை கட்டி போட்டனர். மேலும்,  காவலாளியின் கை, கால்களை கட்டிவிட்டு அருகில் ஒரு நபர்  கத்தியுடன் நின்றுள்ளார். அவர் காவலாளியிடம், ‘‘சத்தம்  போட்டால் வெட்டி கொன்று விடுவேன்’’ என மிரட்டியுள்ளார்.

பின்னர், அவரிடமிருந்து மர்ம கும்பல் சாவியை வாங்கி குடோனை திறந்துள்ளனர். அதன்பிறகு, பல்வேறு வகையான தையல் மிஷின்கள், மோட்டார்களை அவர்கள் கொண்டு லாரியில் தப்பியுள்ளனர். முன்னதாக அவர்கள் விஜயகுமாரின் கை, கால்களை அவிழ்த்து விட்டு மிரட்டி சென்றுள்ளனர்.

இதன் பிறகு அவர் செல்போன் மூலமாக பொறுப்பாளர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடோனில் சோதனை செய்தபோது 27 தையல் மிஷின்கள், 10 மோட்டார்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு சுமார் 35 லட்சம் என்று குடோன் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் கர்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து உள்ளார். மேலும், போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: