நிர்மலா சீதாராமன் அறிவுரை இந்திய ராணுவ தளவாடங்களை வெளிநாட்டுக்கும் விற்க வேண்டும்

புதுடெல்லி: ‘‘ராணுவ கொள்முதல் மிகவும் கவனமாகவும், விரைவாகவும் நடந்து வருகிறது. உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகள் சிறந்தது என ராணுவத்தை திருப்திபடுத்த வேண்டும்’’ என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ராணுவ தளவாட தொழிற்சங்கத்தின் சார்பில் டெல்லியில் நேற்று ராணுவ கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: உள்நாட்டில் பல்வேறு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. உங்கள் தயாரிப்புகள் மிகச் சிறந்தது என ராணுவத்தினரை நீங்கள் திருப்திப்படுத்த வேண்டும். உங்களிடம் தளவாட பொருட்களை வாங்கும்படி ராணுவத்தை நான் வற்புறுத்த முடியாது. போருக்கு தயார் நிலை என்பது எந்த விதத்திலும் தடைபடக் கூடாது என்பதை நான் உறுதி செய்ய வேண்டும். இதற்கு முன் பாதுகாப்புத் துறை அமைச்சர்களாக இருந்த மனோகர் பாரிக்கர், அருண் ஜெட்லி ஆகியோர் ராணுவ கொள்முதலை எளிதாக்கியதோடு மட்டுமின்றி, வெளிப்படைத் தன்மையையும் ஏற்படுத்தினர்.

அதனால், ராணுவ கொள்முதல் கவனத்துடனும், விரைவாகவும் நடக்கிறது. உள்நாட்டில் உள்ள ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள், இந்திய சந்தையை மட்டும் நம்பியிருக்கக் கூடாது. இந்த மனநிலையில் இருந்து நீங்கள் வெளியே வர வேண்டும். போர்க் கருவிகளை உற்பத்தி செய்யும் திறன் இல்லாத பல நாடுகளும், அவற்றை வாங்குகின்றன. அதனால் நீங்கள் வெளிநாட்டு சந்தைகளையும் கவர வேண்டும். ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்பது, இந்தியாவுக்கு மட்டும் தயாரிப்பது அல்ல. வெளிநாடுகளுக்கும் இந்தியாவில் தயாரிக்கலாம். உங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான உதவிகளை மத்திய அரசு செய்யும். பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே முன்பு கொள்முதல் செய்யப்பட்ட பல தளவாட பொருட்கள் தற்போது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவற்றை தனியார் நிறுவனங்கள் தயாரிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: