அமர்ந்தே இருந்தால் ஆபத்து...கவலையை மூட்டை கட்டினாலே போதும் : இதயம் காக்க சில டிப்ஸ்

மனித உறுப்புகளில் மகத்தான பங்காற்றுவது இதயம். இது 24 மணிநேரமும் இயங்குவதால்தான் நாம் நிம்மதியாக உறங்கி எழுந்து அன்றாட பணிகளை செய்ய முடிகிறது. நமக்காக அயராது உழைக்கும் இதயத்தின் ஆரோக்கியம் குறித்து நாம் கவலை கொள்வதில்லை. கண்டதையும் சாப்பிடுகிறோம். தேவையற்ற பாரங்களை மனதில் ஏற்றிக் கொள்கிறோம். இதன் விளைவு இதயம் நோய்க்கு ஆளாகிறது. இதயத்திற்கு பாதிப்பு என்றால் மட்டுமே நாம் அது குறித்து கவலைக் கொள்கிறோம். இதயத்தை பாதுகாக்கவும், இதயநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செப்டம்பர் 29ம் தேதி உலக இதய நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

இதயத்தை முறையாக பராமரிக்காவிட்டால், மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தை பாதுகாக்க வல்லுநர்கள் கூறும் வழிமுறைகளை காண்போம்...

* தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு இரண்டு மணி நேரங்களை மட்டுமே தொலைக்காட்சி பார்ப்பதற்கு ஒதுக்கலாம். அதற்கு மேல் டிவி பார்ப்பவர்களுக்கு 125 சதவிகிதம் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

* பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குளிர்பானங்களில் உள்ள உயர் டிரை கிளிசராய்ட் அளவு மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

* உட்கார்ந்து கொண்டே பல மணிநேரம் வேலை செய்வது இதயத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

* சதா மனஉளைச்சல், சோகம், வேதனை என்று இருப்பவர்களுக்கு இதயம் சீக்கிரத்திலேயே பாதிப்படையும்.

* அதிகப்படியான குறட்டை விடுபவர்களுக்கு இதயம் பாதிப்படையும் வாய்ப்பு அதிகம்.

* ஈறுகள் நோய்க்கும் இதய பாதிப்பிற்கும் தொடர்பு அதிகமாக உண்டு. ஈறுகளை நோயின்றி காப்பது இதயத்தில் சீரான ரத்த ஓட்டத்தை அளிக்கும்.

* ரத்தத்தில் கொலஸ்ட்ரால், சர்க்கரை, பிபி போன்றவற்றின் அளவை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.

* புகைப்பழக்கம் இதயத்தின் தமனிகளை பாதித்து குறுகலாக்க செய்கிறது. இதனால் ரத்தஅழுத்தம் ஏற்படும். இவை நாளடைவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். புகை பிடிப்பவரின் அருகில் இருப்பதை மற்றவர்கள் தவிர்ப்பது நலம்.

* நல்ல தூக்கம் மனிதருக்கு மிகவும் அவசியம். தூக்கமின்மை மனதளவிலும் உடல் அளவிலும் உபாதைகளை கொண்டுவரும். மேலும் இதய தமனிகளில் கால்சியம் அளவை அதிகரித்து, பிளேக், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்பட வழிவகுக்கும்.

* ஒவ்வொரு நாளும் ஒரு அரை மணிநேரமாவது உடற்பயிற்சி செய்து வந்தாலே இதயநோய் வருவதிலிருந்து 60 சதவிகிதம் தப்பிக்க முடியும். யோகா செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.இவ்வாறு நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

இதயநோய் ஏற்படாமல் தவிர்க்க நமது உணவுபழக்கத்திலும் நாம் கவனம் கொள்ள வேண்டும்

* உப்பை குறைவாக பயன்படுத்த வேண்டும்.

* காய்கறிகள், பழங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பப்பாளி, ஆரஞ்சு, தக்காளி உள்ளிட்ட சிகப்பு, ஆரஞ்சு நிற காய்கறி, பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

* மீன்களில் உள்ள ஒமேகா-3 சத்து இதயத்திற்கு வலிமை அளிக்கிறது. சைவம் எனில், பிளாக்ஸ் விதைகள், ஒமேகா 3 மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.

* கொழுப்பு இல்லாத இறைச்சி, ஆலிவ் எண்ணெய், மக்காசோளம், சூரியகாந்தி எண்ணெய் வகைகள் இதயத்திற்கு பாதுகாப்பளிக்கின்றன.

* ஒரு கைப்பிடி பாதாம், வால்நட் போன்றவற்றை தினசரி எடுத்துக் கொள்ளலாம்.

* கொழுப்பு இல்லாத தயிர் நல்லது.

* ஓட்ஸ் தினமும் காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* அடர் பீன்ஸ், கறுப்பு ராஜ்மா போன்றவற்றில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின் பி சத்துக்கள் மற்றும் தாது உப்புகள் இதயத்திற்கு நலம் பயப்பன.

* சோயா பன்னீர் எனப்படும் ‘டோபு’ மிகவும் நல்லது.

* பசலை கீரை சிறந்தது.

* அடர்ந்த சாக்லேட்டுகள் இதயத்திற்கு சிறந்தது.

* மாவுச்சத்து உணவின் அளவினை குறைத்து விடுங்கள்.

* பூண்டு, முழு தானியங்கள் உங்கள் உணவில் இடம்பெறட்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: