சென்னை: சென்னை எம்டிசியில் மேலாளர்கள் 14 பேரை இடமாற்றம் செய்த உத்தரவு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் துணை மேலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் 14 பேரை இடமாற்றம் செய்து மேலாண் இயக்குனர் அன்பு ஆப்ரகாம் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:
தண்டையார்பேட்டை பஸ் டெப்போ துணை மேலாளர் (ஒர்க்ஸ்) வி.கிருஷ்ணமூர்த்தி குரோம்பேட்டை டெப்போவுக்கும், குரோம்பேட்டை துணை மேலாளர் வி.ராமன் தண்டையார்பேட்டைக்கும், தலைமையிட துணை மேலாளர் ஆர்.மணிவண்ணன் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் (இயக்கம்) துணை மேலாளராகவும், கோயம்பேடு பஸ் பஸ் ஸ்டாண்டு துணை மேலாளர் பி.தமிழரசன் அயனாவரத்துக்கும், பாடியநல்லூர் டெப்போ உதவி மேலாளரும், கிளை மேலாளருமான வி.பி.கணேச மூர்த்தி தண்டையார்பேட்டைக்கும், தண்டையார்பேட்டை உதவி மேலாளர் செந்தில்குமார் கே.கே.நகருக்கும், பேசின்பிரிட்ஜ் உதவி மேலாளர் மணிவண்ணன் பாடியநல்லூருக்கும், அயனாவரம் வடக்கு வருவாய் உதவி மேலாளர் வரதராஜன் அண்ணாநகருக்கும், குரோம்பேட்டை ஓட்டுநர் பயிற்சி பள்ளி முதல்வர் சரிதா குரோம்பேட்டை ஸ்டோருக்கும், வடபழனி டெப்போ மூத்த உதவி பொறியாளரும், கிளை மேலாளருமான சுரேஷ் பேசின் பிரிட்ஜ் டெப்போவுக்கும், குரோம்பேட்டை உதவி பொறியாளர் குமார் வடபழனி டெப்போவுக்கும், கே.கே.நகர் உதவி பொறியாளர் சதீஷ் குமார் குரோம்பேட்டைக்கும், குரோம்பேட்டை பயிற்சி மைய உதவி பொறியாளர் சிவகுமார் குரோம்பேட்டை ஓட்டுநர் பயிற்சி மைய முதல்வராகவும் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.