வாக்குச்சாவடி தொடர்பாக வாக்காளர் மனு அளிக்கலாம் கலெக்டர் தகவல்

விருதுநகர், ஆக.24: விருதுநகர் மாவட்ட வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதால், கோரிக்கைகள் குறித்து 28ம் தேதிக்குள் மனுஅளிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெயசீலன் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இச்சீரமைப்பு பணியின் போது சேதமடைந்த வாக்குச்சாவடிகளை புதுப்பிக்கவும், கிராம மற்றும் நகர்ப்புற வாக்குச்சாடிகளில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1500க்கு மேல் உள்ள வாக்குச்சாடிகளைப் பிரித்து புதிய வாக்குச்சாவடிகளை உருவாக்குதல், வாக்குச்சாவடிகளின் பெயர், கட்டிடம் மற்றும் அமைவிட மாற்றம், வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளின் பெயர் மாறுதல் திருத்தங்கள் தொடர்பான மற்றும் 2 கி.மீ தெலைவிற்கு அப்பால் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து, வாக்காளர்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிய வாக்குச்சாவடிகளை உருவாக்குதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் தொடர்பான கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை இம்மாதம் 28ம் தேதிக்குள் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் மனுவாக அளிக்கலாம் என கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

The post வாக்குச்சாவடி தொடர்பாக வாக்காளர் மனு அளிக்கலாம் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: