வதந்திகளை நம்ப வேண்டாம் ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது உறுதி: முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பேட்டி

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் தொழிலாளியை தாக்கிய மயக்க ஊசி போட்டு பிடிக்கும் பணிகள் நேற்று 5வது நாளாக நடைபெற்றது.  மேபீல்டு எஸ்டேட் பகுதியில் இருந்து மீண்டும் தேவன் எஸ்டேட் பகுதிக்கு இடம் மாறி சென்றதால் வனத்துறையினரும் அப்பகுதிக்கு விரைந்தனர்.மதியம் ஒரு மணியளவில் புலி மேபீல்டு மற்றும் தேவன் எஸ்டேட் பகுதிக்கு இடையேயுள்ள புதர் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர் அப்பகுதியில் புலியை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தினர். புலியை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் நடவடிக்கைகள் குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது: கடந்த 5 நாட்களாக 90க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பணியாளர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற வனப் பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் தீவிரமாக கண்காணித்து மயக்க ஊசி போட்டு பிடிக்கும் ஈடுபட்டு வருகிறோம். ஆறு கால்நடை மருத்துவர்களும் புலியைப் பிடிக்க மயக்க ஊசி செலுத்தும் பணிக்கு தயாராக உள்ளனர். தேயிலை தோட்டப் பகுதிகளிலும் வனப்பகுதியிலும், புதர்களுக்குள்ளும் ஒளிந்து மறைந்து கொள்ளும் புலிக்கு மயக்க ஊசியை செலுத்தி பிடிப்பதற்கான கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து பணியாளர்களும் இரவு பகலாக இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்ட இடங்களில் புலி கூண்டுக்குள் செல்லவில்லை. இந்த புலியானது கால்நடைகளைத் தாக்கி புதர் பகுதிக்கு இழுத்துச் சென்று மறைவாக வைத்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டது. அது கூண்டுக்குள் செல்வதை தவிர்த்து வருவதை கண்காணித்து வந்துள்ளோம். புலி அடிக்கடி தன் இருப்பிடத்தை இடம் மாற்றிக் கொள்வதால் அதனை அப்பகுதியில் இருந்து வெளிப்பகுதிக்கு கொண்டு வந்து வசதியான இடத்தில் வைத்து மயக்க ஊசி போட்டு பிடிப்பதுதான் எங்களது திட்டம்.மனிதர்கள், மாடுகள் தாக்கும் இந்த புலியை மயக்க ஊசி போட்டு பிடிப்பதுதான் இறுதி நடவடிக்கையாகும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. இது குறித்து வரும் தேவையற்ற வதந்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாம் என தெரிவித்தார்.    இந்த நிலையில்  தேவன் எஸ்டேட் பகுதியில் புலி மறைந்து இருக்கும் பகுதியில் புலியை தேடும் பணியில்நேற்று மாலை 6 மணி வரை வனத்துறையினர் ஈடுபட்டனர். எனினும் புலிக்கு மயக்க ஊசி போட்டு பிடிக்கும் வகையில் புலி சிக்காததால் 6 மணியளவில் பணிகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து இன்றும் புலியைத் தேடி கண்டுபிடித்து மயக்க ஊசி போட்டு பிடிக்கும் பணிகள் தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்….

The post வதந்திகளை நம்ப வேண்டாம் ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது உறுதி: முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: