வகுப்பறை பழுதடைந்ததால் சேதமடைந்த பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் பயிலும் மாணவர்கள்

* விழும் அபாயத்தில் பழைய சுவர் * இருக்கை, மின் வசதியின்றி தவிப்புசாயல்குடி : கீழ்சாக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் இன்றி சேதமடைந்த பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் வகுப்புகள் நடப்பதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.கடலாடி ஒன்றியம், கீழச்சாக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 12 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த ஒரு தலைமையாசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர் என 2 ஆசிரியர்கள் உள்ளனர்.இங்கு இருந்த ஓடு வேயப்பட்ட வகுப்பறை கட்டிடம் சேதமடைந்து விட்டதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மேற்கூரைகள் அகற்றப்பட்டு விட்டது. ஆனால் சுவர்களை இடித்து அகற்றாமல் உள்ளது. இதனால் வகுப்பறை இன்றி மாணவர்கள் அருகிலுள்ள பழைய, சேதமடைந்த பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் பாடம் படித்து வருகின்றனர். அந்த கட்டிடத்தில் மின் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இன்றி சேதமடைந்து இருப்பதால், அபாயத்துடன் பாடம் படித்து வருகின்றனர்.இதுகுறித்து பெற்றோர் கூறும்போது, இங்கிருந்த பழைய வகுப்பறை கட்டிடம் சேதமடைந்தது. இதனால் மேற்கூரை மட்டும் அகற்றப்பட்டு, சுவர்கள் இடிக்கப்படாமல் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் மாற்று ஏற்பாடு இன்றி 1993ல் கட்டப்பட்டு, சேதமடைந்த கட்டிடம் என பயன்பாடின்றி ஒதுக்கப்பட்டு, பூட்டப்பட்டு கிடந்த அருகிலுள்ள பழைய பஞ்சாயத்து அலுவலகத்தில் பாடம் நடத்தப்படுகிறது. அங்கு மின்வசதி கிடையாது, 30 வருடங்கள் ஆகிவிட்டதால் கட்டிடத்தின் மேற்கூரை, பக்கவாட்டு சுவர்கள், தரைத்தளம் ஆகியவை சேதமடைந்து அபாய கட்டத்தில் இருக்கிறது. அந்த கட்டிடத்திற்குள் மாணவர்கள் அச்சத்துடன் பாடம் படிக்கும் அவலம் உள்ளது. ஒரு சிறிய அறைக்குள் 5 வகுப்புகளும் நடப்பதால் மாணவர்கள் படிப்பில் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.மேலும் தற்காலிகமாக வகுப்பறை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 4 கம்பிகள் மட்டும் நடப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட பணிகள் நடக்கவில்லை. கிடப்பில் போடப்பட்டுள்ளது.மாணவர்கள் விளையாடும் போது பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் ஏழை குடும்பங்களை சேர்ந்த இக்கிராம மாணவர்கள் கடும் அவதியுடன் படிக்கும் நிலை உள்ளது. எனவே விரைவாக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும், அதுவரை மின் வசதி, மாணவர்கள் அமர இருக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக வகுப்பறையை விரைந்து அமைத்து தரவேண்டும் என்றனர்….

The post வகுப்பறை பழுதடைந்ததால் சேதமடைந்த பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் பயிலும் மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: