ராமனின் பாதுகைக்கு ஏன் பட்டாபிஷேகம்?

நமது உடம்பு ஒரு பிரபஞ்சம். அது பாதுகை மீது நிற்கிறது. பிரபஞ்சத்தைத் தாங்கும் ராஜா அது. இரு பாதுகைகளும் தான் பர ஞானம், அபர ஞானம் ஆகும். பக்தர்களை நெருக்கிச் சோதிப்பதில் ஆவல் உடையவன் பகவான். முதல் ஆழ்வார்களை அவ்விதம் செய்து அவர்கள் மூலம் மூன்று திருவந்தாதியான அமிர்தமான பாடல்களை உண்டு பண்ணினான். அதேபோல பரதனை ராமன் பரீட்சை செய்து பாதுகையின் பிரபாவத்தை பரதன் மூலமாக உலகுக்கு காட்டித் தந்தான். வைஷ்ணவ சம்பிரதாயத்தில் முக்கியமாக பாதுகைப் பிரகடனம் திகழ்கிறது. ராமனிடமிருந்து பெற்றுக் கொண்ட பாதுகைகளை தன் சிரத்தின் மீது வைத்துக் கொண்டு ராமனை வலம் வந்து வணங்கினான், பரதன். பாதுகையும், பாதுகையில் ஏறும் திருவடிகளும் பெருமை உடையன. கிருஷ்ண ஜெயந்தியன்று நம் வீடுகளில் கண்ணன் பாதங்களை மாவால் இழை கோலம் போடுவார்கள். காரணம் என்ன ? கண்ணன் தன் தோழர்களுடன் கோபியர் வீடு சென்று வெண்ணெய் திருடி உண்பான். ஆச்சியர் பார்த்து விடுவார்களோ என்ற அவசரத்தில் பயத்தில், வீடு முழுவதும் வெண்ணெய் சிந்திவிடும். சிதறி விழுந்த வெண்ணெயில் அவன் நடந்து நடந்து அவன் திருப்பாதங்களின் சுவடு வீடு முழுதும் பதிந்திருக்கும். முற்காலத்தில் வெண்ணெயினாலும், கண்ணன் பாதங்களைப் போடுவது வழக்கம். இப்போது அரிசி மாவினால் கோலம் போடுகிறார்கள். கண்ணனின் திருப்பாதங்களை மிகச் சுலபமாக போட்டு விடலாம். எட்டு என்ற எண்ணில் ஐந்து புள்ளிகள் வைத்தால் போதும், இதில் எட்டு என்பது அஷ்டாக்ஷரம் (ஓம் நமோ நாராயணாய), ஐந்து என்பது பஞ்சாட்சரம் குறிக்கும். எனவே, வைணவத்திற்கும் சைவத்திற்கும் வேறுபாடு காட்டக் கூடாது. இரண்டும் ஒன்றே.ராமன் தனக்குப் பிரதிநிதியாக அடையாளம் கொடுக்கும்போது தன்னுடைய பாணம் ஒன்றைக் கொடுத்திருக்கலாமே? ஏன் தன் பாதுகைகளை அனுப்பினான்? அவை சிம்மாசனம் ஏற்றி வைக்கப்பட்டு பரதனால் பூஜிக்கத்தக்க பெருமையும், மகிமையும் எவ்வாறு பெற்றது? ஒரு அரச குமாரன் அதைச் சுமக்கும் அளவுக்கு ஒரு சிறப்பைப் பெற்றுள்ளது! தசரதன் ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய ஆசைப்பட்டான். கைகேயி பரதனுக்குப் பட்டம் கட்ட வேண்டினாள். அதையும் தசரதன் தந்தான். பாதுகைதான் ராஜ்ய பரிபாலனம் செய்தது. ஏன்? எல்லாம் பகவான் இச்சைப்படித்தான் நடக்கும். நம் கையில் ஏதுமில்லை. பாதுகைக்கு இந்த அதிர்ஷ்டம் எப்படிக் கிடைத்தது என்பதற்கு பக்தர் ஒருவர் பொருத்தமான விளக்கம் அளித்தார். எல்லோரும் என்ன முயன்றாலும், திட்டம் போட்டாலும் தெய்வ சங்கல்பம் என்று ஒன்று உண்டு. திருமால் எப்போதும் பாதுகைகளை வெளியே விட்டுவிட்டுத்தான் உள்ளே போவார். ஒரு நாள் ஏதோ நினைவாக பாதுகைகளுடனேயே சயனிக்க ஆரம்பித்தார். பகவானுக்கு நித்திரை ஏது? தூங்குவதுபோல காண்பார்! இது யோக நித்திரை எனப்படும். பகவான் தூங்கினால் எல்லாம் ஸ்தம்பித்து விடும், பகவான் தூங்கும்போது பல மடங்கு அழகாக இருப்பான். ரதிதேவி மிக்க அழகு தான். ஆனால், அவள் தூங்கும்போது பார்க்கச் சகிக்காது. பகவான் தூங்கும் அழகைப் பார்த்து, பாதுகைகள் வர்ணித்து ஆனந்தக் கூத்தாடி மகிழ்ந்தது. இதைக் கண்ட கிரீடத்திற்குக் கோபம். நித்திரையிலிருக்கும் பகவானை ஏன் தொந்தரவு செய்கிறாய்? உன்னை விட உயர்ந்தவன் நான் சும்மா இருக்கிறேன். கேவலம் பாதுகை நீ. உனக்கு ஏன் இத்தனை தைரியம் என ஏசியது. பாதுகையும் கோபித்து நான்தான் உயர்ந்தவன் என்றது. கிரீடம், நான்தான் பகவானின் முடி மீது அமர்ந்திருக்கிறேன் என்று பெருமைப்பட்டது. அப்போது பாதுகை, பகவான் திருப்பாதங்களைத் தாங்கும் நான்தான் உயர்ந்தவன் என்றது. கிரீடம், சங்கு சக்கரங்களைக் கேட்க, அவையும் நீதான் உயர்ந்தவன். இதில் என்ன சந்தேகம் என்று சாட்சி சொல்லின. பாதுகைக்குத் துக்கம். பகவான் இதையெல்லாம் கேட்டுக்  கொண்டிருக்கிறான். பிறகு பாதுகை பகவானிடம் தன்னை அவமானப்படுத்தியதையும், கிரீடத்திற்கு அனுகூலமாக சங்கு, சக்கரங்கள் பேசினதையும் சொல்லி வருந்தியது. அப்போது பகவான் பாதுகைக்கு கௌரவம் கொடுக்க முடிவு செய்தான். பகவானின் திருப்பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைதான் சிரேஷ்டம். ஆகவே, பாதுகையை மேலே உயர்த்தி, கிரீடத்தை கீழே இறக்குவதாகவும், சாட்சி சொன்ன சங்கு சக்கரங்களை பாதுகைக்கு அர்ச்சனை செய்யும்படியும் ஆக்குகிறேன் என்று சங்கல்பித்துக் கொண்டார்.    சங்கும் சக்கரமுமே பரத சத்ருக்னர்கள் ஆனார்கள். பாதுகைக்குப் பட்டாபிஷேகம். அதன் முடிவில் பகவானின் கிரீடம் நந்தி கிராமத்தில். பரத சத்ருக்னர்கள் அதைப் பூஜித்துக் கொண்டு, ராமனின் பிரதிநிதியாக அரசை ஆண்டார்கள். அல்லது இப்படியும் சொல்வது உண்டு. ஒரு சமயம் முதலை வாயில் அகப்பட்டு ஆதி மூலமே என்று அலறிய யானையைக் காக்கச் சென்ற மகாவிஷ்ணு, முதலையைக் கொன்று யானையைக் காத்துத் திரும்பி வந்து பாற்கடலில் தன் பாம்புப் படுக்கை அடைத்தார். தன் பாதுகைகளைக் கழற்றிப் பக்கத்தில் வைத்தார். அப்போது பகவானின் முடியிலிருந்த கிரீடம் பாதுகைகளைப் பார்த்து, ‘‘கண்ட இடங்களில் அசுத்தத்தையெல்லாம் மிதிபடும் உனக்கு பகவான் அருகில் இருக்க என்ன  யோக்கியதை இருக்கிறது. நீ இருக்க வேண்டிய இடம் வெளியே’’ என்றது. பகவானின் கைகளிலிருந்து சங்கும், சக்கரமும் கிரீடத்துடன் சேர்ந்து பாதுகையைப் பார்த்துச் சிரித்தன. பாதுகை கண்ணீர் விட்டு பகவானிடம் இச்செய்தியைக் கூறிற்றாம். அப்போது பகவான். ‘‘பாதுகையே, உன்னைப் பார்த்து அசுத்தத்தை மிதித்தவன் என்று கேலி செய்த கிரீடம் என் மீதே 14 வருடங்கள் அமர்ந்திருக்கும், உத்தம பக்தனாகிய உன்னைப் பார்த்துச் சிரித்த குற்றத்திற்காக, சங்கு சக்கரங்கள் மனித உருவெடுத்து பதினான்கு வருடங்கள் உன் அருகிலேயே நின்று கண்ணீர் விடட்டும்’ எனக் கூறினார். அதனால்தான் சங்கு சக்கரங்களின் அவதாரமாக சத்ருக்னனும், பரதனும் பாதுகைகளை எடுத்துச் சென்று வணங்குகிறார்கள். பதினான்கு ஆண்டுகள் ராமனை எண்ணி அழுது கொண்டிருந்தனர். இவ்வாறு ராம காவியத்தில் நிறைய செவி வழிக் கதைகள் உண்டு. கற்பனையோ நிஜமோ ஆனால், ராமனின் திருப்பாதங்களின் பிரபாவத்தை அழகுற கூறுகின்றன.  K.V. சீனிவாசன்…

The post ராமனின் பாதுகைக்கு ஏன் பட்டாபிஷேகம்? appeared first on Dinakaran.

Related Stories: