மாணவர்களின் முன்னேற்றத்திற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுகிறார்

திருவாரூர், ஆக. 17: மாணவர்களின் முன்னேற்றத்திற்காக தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் என திருவாரூர் ஒன்றிய குழு தலைவர் புலிவலம் தேவா தெரிவித்துள்ளார். திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட சேமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி வளாகத்தில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன் மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழு கவுன்சிலர் மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு செழியன் மற்றும்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை சுகந்திபாலா வரவேற்றார்.

இதில் புதிய கட்டிடத்தை ஒன்றிய குழு தலைவர் புலிவலம் தேவா திறந்து வைத்து பேசுகையில், மாவட்டத்தில் மற்ற ஒன்றியங்களை விட திருவாரூர் ஒன்றியத்தில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் கூடுதலான அளவில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தான் இந்த புதிய அங்கன்வாடி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இந்த பகுதியில் துவக்கப் பள்ளிக்காக 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி ஒன்றால் மட்டுமே நாடும், வீடும் முன்னேற்ற பாதையில் செல்ல வழிவகுக்கும் என்ற அடிப்படையில் தமிழகத்தில் கல்விக்காகவும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

எனவே மாணவர்கள் அரசின் திட்டங்களையும் இது போன்ற கட்டிட வசதிகளையும் உரிய முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றார். இதில் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் குணசேகரன், ரேவதி வரதராஜன், குழந்தை வளர்ச்சி திட்டமேற்பார்வையாளர் தனலட்சுமி, வட்டார ஒருங்கிணைப்பாளர் அமர்நாத் மற்றும் அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post மாணவர்களின் முன்னேற்றத்திற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுகிறார் appeared first on Dinakaran.

Related Stories: