மறுகால்பாயும் நீர்நிலைகளுக்கு நடுவே வறண்டு கிடக்கும் அனுப்பன்குளம் கண்மாய்: சிவகாசி பகுதி விவசாயிகள் கவலை

 

சிவகாசி, ஜன. 26: சிவகாசி அருகே அனுப்பன்குளம் கண்மாய் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சிவகாசி அருகே அனுப்பன்குளம் கிராமம் உள்ளது. இங்குள்ள கண்மாய் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டது. 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இக்கண்மாய் மூலம் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. அனுப்பன்குளம் மட்டுமின்றி மீனம்பட்டி, ஆண்டியாபுரம், பேராபட்டி, சுந்தரராஜபுரம், பாறைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த கண்மாய் உள்ளது.

இந்த கண்மாய்க்கு மழைக்காலங்களில் காட்டாறு, ஓடைகள் மூலமாக தண்ணீர் வரத்து இருக்கும். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மாதம் தொடர் கனமழை காரணமாக செங்குளம் கண்மாய், மங்களம் கண்மாய், கள்ளிபுதூர் கண்மாய், கொத்தனேரி கண்மாய், குமிழங்குளம் கண்மாய், புதுக்குளம் கண்மாய், செங்கமலபட்டி கண்மாய் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாய்ந்தது. ஆனால் அனுப்பன்குளம் கண்மாய்க்கு நீர்வரத்து இல்லை.

இதனால், போதிய மழை பெய்தும் கண்மாய் தண்ணீர் இன்றி காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேலும் இந்த கண்மாயை சுற்றி உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் சூழல் உள்ளது. இந்தக் கண்மாயில் சில மாதங்களுக்கு முன் தூர்வாறும் பணிகள், கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்த போது அதிக தண்ணீர் கண்மாயில் நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் போதிய நீர் வரத்து இல்லாமல் கண்மாய் வறண்டு காணப்படுவதால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

The post மறுகால்பாயும் நீர்நிலைகளுக்கு நடுவே வறண்டு கிடக்கும் அனுப்பன்குளம் கண்மாய்: சிவகாசி பகுதி விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: