நீலகிரி மாவட்டம் முழுவதும் காற்றுடன் மழையால் குளிர் வாட்டுகிறது

ஊட்டி: நீலகிரி  மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது.  நீலகிரி  மாவட்டத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கியது. 10 நாட்களுக்கும் மேலாக பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பல இடங்களில் முக்கிய சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்கள் மின்கம்பிகள் மீதும் விழுந்ததால் மின் துண்டிப்பும் ஏற்பட்டன. இவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டன. அதன் பின்னர் மழை சற்று குறைந்தது. பகல் நேரங்களில் வெயில், மேகமூட்டமான காலநிலைகள் நிலவி வந்தது.

இந்நிலையில், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக நீலகிரி  மாவட்டத்தில் ஊட்டி, மஞ்சூர், எமரால்டு, அவலாஞ்சி, தேவாலா, அப்பர்பவானி  உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. சாரல் மழை காரணமாக ஊட்டி நகரில் குளிாின் தாக்கம் அதிகாித்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் போன்றவற்றிற்கு வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டது.

ஊட்டி நகரில் நேற்று வெப்பநிலை அதிகபட்சமாக 14 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 8 டிகிரி செல்சியசும் நிலவியது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.  மழை, கடும் குளிர் நிலவுவதால் பொது மக்கள் தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும் எனவும், காதுகளில் குளிர் காற்று புகாதவாறு தொப்பி அல்லது மப்ளர் பயன்படுத்த வேண்டும். சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: