மரக்காணம் விஷச்சாராய கொலை வழக்கு 1,250 லிட்டர் மெத்தனாலை ₹60 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளனர்

விழுப்புரம், மே 26: விஷச்சாராய கொலை வழக்கில் காவலில் எடுக்கப்பட்ட 11 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13ம் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்ததில் 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் 8 பேரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தை சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் மெத்தனால் கொடுத்த புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு, இளையநம்பி உள்பட 11 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி கூடுதல் எஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் அவர்களிடம் நேற்று 2வது நாளாக தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் மெத்தனால் எங்கிருந்து வந்தது. எந்தெந்த சாராய வியாபாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்து துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.

இதில் முக்கிய குற்றவாளியான சென்னை திருவேற்காட்டை சேர்ந்த இளயநம்பி என்பவருக்கு சொந்தமான கெமிக்கல் ஆலை வானகரத்தில் செயல்பட்டு வந்ததாம். நஷ்டத்தில் இயங்கிய ஆலை மூடப்பட்ட நிலையில் அங்கிருந்துதான் 1,250 லிட்டர் மெத்தனாலை புதுச்சேரியைச் சேர்ந்த அவருடைய நண்பர் ஏழுமலை என்பவருக்கு ரூ.60 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளாராம். இதனை வாங்கிய ஏழுமலை அங்கிருந்து விழுப்புரம், செங்கல்பட்டு அருகில் கடலூர் உள்ளிட்ட பல மாவட்ட சாராய வியாபாரிகளுக்கு சப்ளை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இன்று மாலையுடன் அவர்களது போலீஸ் காவல் முடிவடையும் நிலையில், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post மரக்காணம் விஷச்சாராய கொலை வழக்கு 1,250 லிட்டர் மெத்தனாலை ₹60 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளனர் appeared first on Dinakaran.

Related Stories: