மதுரை மேற்கு ஒன்றிய பள்ளிகளில் 4 டூ 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாசிப்பு இயக்கம்

மதுரை, ஜூலை 25: பள்ளி குழந்தைகளிடம் இயல்பாக உரையாடவும். சமூக சிந்தனைகளை தூண்டவும், அவர்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரவும் வாசிப்பு இயக்கம் நடத்த தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டது. இதை தொடர்ந்து வாசிப்பு இயக்கம் அறிமுக விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் கடந்த ஜூலை 21ம் தேதி மதுரை புதூரில் நடந்தது. இதில் மாவட்ட அளவில் 101 தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எடுத்த முடிவுகள்படி, வாசிப்பு இயக்கம் மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் செயல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஒன்றியத்தை தேர்வு செய்து, அங்கு முன்னோடி ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மேற்கு ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதன்படி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடையே இந்த வாசிப்பு இயக்கம் நடந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா ஆலோசனைப்படி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சரவண முருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அமுதசெல்வி, ராணி குணசீலி மற்றும் வாசிப்பு இயக்கத்தின் தன்னார்வலர்கள் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு கற்றலின் திறனறிந்து வாசிப்பு திறனுக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற 4 நிலைகளில் மாணவர்களுக்கு கற்பித்தனர். வாசிப்பு இயக்கத்திற்காக தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த 53 புத்தகங்களும் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

The post மதுரை மேற்கு ஒன்றிய பள்ளிகளில் 4 டூ 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாசிப்பு இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: