போலி குடும்ப அட்டைகளை களைய நடவடிக்கை: நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு

சென்னை: போலி குடும்ப அட்டைகளை களைய உரிய கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் ராஜாராமன், துணை ஆணையாளர் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: போலி குடும்ப அட்டைகளை களைவதற்கு பின்வருமாறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. அதன்படி, பொதுவாக பிராக்ஸி முறை பரிவர்த்தனையானது அங்கீகாரச் சான்றிதழின் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டும். அதற்கு தனியாக பதிவேடு அந்தந்த நியாயவிலைக் கடைகளில் பராமரிப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அங்கீகாரச் சான்று அல்லாமல் பிராக்ஸி முறையில் பரிவர்த்தனைகள் ஏதும் மேற்கொள்ளப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரரால் அல்லது குடும்ப உறுப்பினரால் பொருள் பெற்றுக்கொண்டதை உறுதி செய்துகொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் அத்தியாவசியப் பொருட்கள் பெறப்படவில்லை என்று உறுதி செய்யும்பட்சத்தில், நியாயவிலைக் கடை பணியாளர் மீது உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீண்ட நாட்களாக குறிப்பாக தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டை விவரங்களை பொது விநியோகத் திட்ட தரவுத் தொகுப்பிலிருந்து பெற்று அக்குடும்ப அட்டைதாரர்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இறந்த ஒரு நபர் குடும்ப அட்டை, குடும்ப அட்டை தரவுத் தொகுப்பில் இருந்து நீக்கம் செய்யாமல் அக்குடும்ப அட்டைக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டிருப்பின் அவ்வாறான குடும்ப அட்டையை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். கதவு எண் வாரியாக ஒரு குடும்ப அட்டைக்கு மேல் வழங்கப்பட்டிருக்கும் விவரங்களை தரவிறக்கம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு தவறு கண்டறியப்பட்டால் உடனடியாக குடும்ப அட்டை ரத்து செய்யப்பட வேண்டும். கள ஆய்வின் போது ஒரு நபர் குடும்ப அட்டை இனங்கள் (ஓஏபி நீங்கலாக) தவறாது சரிபார்க்கப்பட்டு அதன் மெய்த்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.குடும்ப அட்டை விவரத் தொகுப்பு முகவரி மற்றும் செல்பேசி எண்ணுடன் ஆணையரகத்திலிருந்து மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இயலும். இந்த தரவினை பொறுப்புடன் பாதுகாப்பாக வைத்திருக்க துணை ஆணையாளர் வடக்கு/தெற்கு மற்றும் அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்கள் கோரப்படுகின்றனர். மேற்கூறிய அறிவுரைகளை முறையாக பின்பற்றி போலி குடும்ப அட்டைகளை களைய நடவடிக்கை மேற்கொண்டு, போலி குடும்ப அட்டைகள் இருப்பது கண்டறியப்படின் அக்குடும்ப அட்டைகளை குடும்ப அட்டை தரவுத் தொகுப்பில் இருந்து நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்….

The post போலி குடும்ப அட்டைகளை களைய நடவடிக்கை: நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: