பெரம்பூர்: சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாநகராட்சி மற்றும் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.பெரம்பூர் ரயில், பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து கடைகளின் விளம்பர பலகை, நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக போலீசாருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, சென்னை மாநகராட்சி 20வது வார்டு செயற்பொறியாளர் சரவணன் தலைமையில் ஊழியர்கள் நேற்று காலை பெரம்பூர் நெடுஞ்சாலைக்கு சென்று, சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தினர்.
அதில், சாலையோர கடை, தள்ளுவண்டி கடைகளை மட்டுமே அகற்றினர். ஆனால் அப்பகுதியில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகளின் விளம்பர பலகைகளை அகற்றவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘போக்குவரத்து போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் ஓட்டல், இனிப்பகங்களில் பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். இப்பிரச்னையில் மாநகராட்சி உயர் அதிகாரிகள், போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனம், விளம்பர பலகைகளை முறையாக அகற்றி நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!