சென்னை: ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை மாற்றியமைக்கும்படி சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய அரசு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வில் எட்டு கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்குவதை எதிர்த்து சென்னையை சேர்ந்த லட்சுமி ஸ்ரீ என்ற மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், எந்த முறையில் விடையளித்திருந்தாலும் மதிப்பெண் வழங்குவது என்ற கான்பூர் ஐஐடி அறிவிப்பு செல்லும் என்று உத்தரவிட்டார்.
அதே நேரத்தில், இரு இலக்க தசம எண்களை விடையாக அளித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து நுழைவுத்தேர்வு வினாத்தாள்களை மறுமதிப்பீடு செய்து, ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து கான்பூர் ஐஐடி பதிவாளர் மேல் முறையீடு செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தனி நீதிபதி உத்தரவால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி குலுவாடி ரமேஷ், நீதிபதி தண்டபாணி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், “ விடைத்தாள்கள் திருத்த பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தரவரிசைப் பட்டியலை மாற்றியமைக்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு தேவையற்றது” என்று கூறி தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!