புதுக்கோட்டையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

புதுக்கோட்டை, ஆக.26: இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கும் விழா நேற்று நடந்தது. கலைஞர் பிறந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி ஊராட்சி, மேலத்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்ட்டர் மெர்சி ரம்யா, உடனிருந்தார். ‘நகர பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது.

பள்ளிகள் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 1,048 துவக்கப்பள்ளிகள், 276 நடுநிலைப்பள்ளிகள், 2 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,326 பள்ளிகளில் 71,006 மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, அனைவருக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் காலை உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.முத்துராஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மஞ்சுளா, புதுக்கோட்டை ஆர்டிஓ முருகேசன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: