பழநியில் வேளாண் கல்லூரி அமைக்கப்படுமா? மாணவர்கள் எதிர்பார்ப்பு

 

பழநி, அக்.21: பழநியில் வேளாண் கல்லூரி அமைக்கப்பட வேண்டுமென மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்திய நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் தொன்றுதொட்டு விளங்கி வருகிறது. தமிழக அரசு சமீபத்தில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து விவசாயத்தின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தி உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் வேளாண் கல்லூரிகள் துவக்கப்பட்டு வருகின்றன.

பழநியைச் சுற்றி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளிலும், அதைச் சார்ந்த ஏராளமான பகுதிகளிலும் விவசாயம் பெரிய அளவில் நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில், மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய நகரான பழநியில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டுமென மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறியதாவது, ஒட்டன்சத்திரத்தில் கடந்த ஆண்டு அரசு கலைக் கல்லூரி மற்றும் பெண்கள் கலைக் கல்லூரி துவக்கப்பட்டுள்ளது. அதுபோல் விவசாய படிப்பை பழநியைச் சுற்றி உள்ள கிராமப்புற மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பழநியில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பழநியில் வேளாண் கல்லூரி அமைக்கப்படுமா? மாணவர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: