பழநியில் தோண்ட தோண்ட கிடைக்குது தொன்மை பொருட்கள்

*அடையாள சின்னங்கள் ஏராளம்*அகழாய்வு செய்ய வலியுறுத்தல்பழநி : பழநியில் தொன்மையான பொருட்கள் ஏராளமாக கிடைப்பதால் அகழாய்வு செய்ய வேண்டுமென தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பழநி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது மலைமீது இருக்கும் நவபாஷாண முருகன் சிலையும், பஞ்சாமிர்தமுமே. ஆனால், வெளி உலகிற்கு தெரியாத பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய பொக்கிஷமாக பழநியும், அதன் சுற்றுப்புற கிராமங்களும் விளங்கி வருகின்றன. இன்றை காலக்கட்டங்களில் மட்டுமின்றி, பண்டைய காலக்கட்டத்திலும் பழநி மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் பிரசித்தி பெற்ற பிரதேசமாக விளங்கியது என்பதற்கு பழநி பகுதியில் கிடைத்த பல்வேறு தொல்லியல் அடையாளங்களின் மூலம் உறுதியாகிறது.தற்போது சமூக ஆர்வமுடைய சிலர் பழநி பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் பண்டை தமிழர்கள் மற்றும் ஆதிகால மனிதர்களின் வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடு, கலச்சாரம் போன்றவை தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது, பழநி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பண்டைய தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் எச்சங்கள், பண்பாட்டு அடையாளங்கள் ஏராளமான அளவில் உள்ளன. எனினும், இவை முறையாக வெளிப்படுத்தப்படுவதில்லை. பழநி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள கோம்பைக்காடு, பாப்பம்பட்டி, கோழியூத்து, ஆண்டிபட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் பழங்குடி மக்களின் வாழ்வியல் ஆதாரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.எடுத்துக்காட்டாக அவர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள், இறந்தவர்களை புதைத்ததற்கான அடையாள சின்னங்கள் மற்றும் விழா சடங்குகளுக்காக வரைந்த பாறை ஓவியங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இங்கு தொல்பழங்கால இறுதிப்பகுதியான 60 ஆயிரம் ஆண்டுகள் முதல் புதிய கற்கால இறுதிப்பகுதியான கிமு 3 ஆயிரம் வரை உள்ள அடையாள சின்னங்கள் ஏராளமாக காணப்படுகின்றன.திருப்பதி மலைக்காடுகளில் உள்ள டைனோசர் வகை ஓவியங்கள் பிரசித்தி பெற்றுள்ளது. ஆனால், அதைவிட தத்ரூபமாக பழநி அருகே பாப்பம்பட்டியில் இருக்கும் சுமார் 28 ஆயிரம் வருடங்களுக்கு முன்புள்ள டைனோசர் வகை ஓவியங்கள் தொல்லியல் துறையினர் பார்வைக்கு படாமலேயே போய் விட்டது. இதுபோல் கோழியூத்தில் அழிந்து போன இனமாக உள்ள கொமோடோ என்ற ராட்சத பல்லியின் ஓவியம் உள்ளது. இந்த அறிய ஓவியங்கள் பிரான்சில் உள்ள லாஸ்கர்ஸ் ஓவியங்களுக்கு இணையானவை. ஆனால், இவை முறையாக உலகிற்கு தெரியப்படுத்தப்பட வில்லை. இந்தோனேசியாவில் கிடைத்த 48 ஆயிரம் வருடத்திற்கு முந்தைய வண்ண ஓவியங்களுக்கு, இணையான அதே காலக்கட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் கொடைக்கானல் சாலையில் உள்ள கோம்பைக்காட்டில் உள்ள பழங்குடி பகுதியில் கிடைத்துள்ளது.இவைகளை அந்த அளவிற்கு பிரசித்தி பெற முயற்சிக்காவிட்டாலும், அழியாமல் பாதுகாக்கும் முயற்சியிலாவது தொல்லியல்துறை ஈடுபடலாம். ஐரோப்பிய நாடுகளில் உள்ள பழங்கால புதைக்குழிகளை விட பழமையானவைகள் பழநி அருகே இரவிமங்கலம், பொருந்தல், பழநி, பாலசமுத்திரம், பொட்டம்பட்டி, ஆயக்குடி ஆகிய பகுதிகளில் இன்றளவும் அழியாமல் உள்ளன. இவையாவும் சுமார் 3 ஆயிரம் வருடங்கள் பழமையானவை. இப்பகுதிகளில் அக்கால மனிதர்கள் பயன்படுத்திய உணவுப்பாத்திரங்கள், அகல் விளக்குகள் மற்றும் சுடுமண் அணிகலன்கள், சிறுவர், சிறுமிகளின் விளையாட்டு பொருட்கள் போன்றவை இன்றளவும் கிடைத்த வண்ணம் உள்ளன.இதுபோல் பழநி அருகே கரடிகூட்டம், அமராவதி மற்றும் சிறுமலை பகுதிகளில் சிந்துவெளி எழுத்துக்கள் கிடைத்துள்ளன. இந்த எழுத்துக்கள் தருமபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மட்டுமே அதிகளவில் கிடைத்ததாக கூறுகின்றனர். ஆனால், இந்த எழுத்துக்கள் திண்டுக்கல், பழநி பகுதிகளில் அதிகளவு கிடைத்தும் தொல்லியல் துறையின் கவனங்கள் இதன்மீது படியவே இல்லை.சீன மற்றும் மாயன் நாகரீகத்தை விட அதிக தொழில்நுட்பம் கொண்டவையாக பண்டைய வேளாண் செயல்பாடுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் பழநி பகுதியில் ஏராளமாக உள்ளன. இதன்படி பழநி அருகே வரதமாநதி அணைப்பகுதியில் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த தடுப்பணைகள், 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த அமராவதி தடுப்பணை, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண் குழாய்கள், அணையின் நீர்மட்டத்தை அறிவிக்கும் எச்சரிக்கை கோடுகளும் இதற்கு சான்றாக உள்ளன. உணவு தானியங்களை பதப்படுத்தும் கி.பி 2 மற்றும் 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோளக்குழிகள் இங்கு அதிகளவில் உள்ளன. வரலாற்றுக்கு முந்தைய காலங்களைப்போல், வரலாற்று காலத்திலும் சிறப்பு வாய்ந்ததாக பழநி பகுதி இருந்துள்ளது. இதற்கு ஆதாரமாக இப்பகுதிகளில் பாண்டியர் மற்றும் கொங்கு சோழர்களின் காலத்தைச் சேர்ந்த ஏராளமான கல்வெட்டுகளும், சிற்பங்களும் அதிகளவில் கிடைத்துள்ளன. இதுபோல் ஐவர் மலை மற்றும் அமராவதி ஆற்றுப்படுகையில் சமண மதம் தொடர்பான சான்றுகளான கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.இதன் மூலம் கிபி 6ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரை இப்பகுதிகளில் சமண மதம் செழிப்பாக இருந்தது தெரிய வருகிறது. இதுபோல் இஸ்ரேல் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் கிடைத்த சூரியனின் நகர்வை கணிக்க உதவும் ஹென்ச் எனப்படும் அமைப்பிற்கு முன்னோடியான சவுக்கை எனும் அமைப்பு பழநி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், ஐவர் மலையிலும் அதிகளவு உள்ளன.தமிழர்கள் வடிவமைத்து பயன்படுத்திய இந்த முறையைத்தான், அவர்கள் காப்பி அடித்துள்ளனர் என்பது கால அளவுகளின் அளவீடுகளில் இருந்து உறுதிப்படுத்தப்படுகிறது. இதுபோல் கட்டிடக்கலைகளிலும் இப்பகுதியில் வாழ்ந்த சங்ககால தமிழர்கள் உச்சத்தில் இருந்தனர் என்பதற்கு பழநி அருகே பொன்னிமலைக்கரடு, பொருந்தல் ஆற்றங்கரை மற்றும் சண்முகநதி ஆற்றங்கரைகளில் கிடைத்த சங்ககால கோயில்களின் கட்டிட எச்சங்கள் மற்றும் செங்கற்களில் இருந்து தெரியவருகிறது. ஆனால், மத்திய தொல்லியல்துறை என்ன காரணத்தினாலோ தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளின் மீது பாரமுகாமாகவே நடந்து வருகிறது. பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள தொல்லியங்கள் சின்னங்களின் மதிப்பை உணர்ந்து தமிழக அரசு பழநியில் அகழ்வைப்பகம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்….

The post பழநியில் தோண்ட தோண்ட கிடைக்குது தொன்மை பொருட்கள் appeared first on Dinakaran.

Related Stories: