பட்டறைகுளம் கரையோரம் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பட்டறைகுளம் கரையோரம் மாதக்கணக்கில் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் பேரூராட்சி எதிர்புறம் செல்லும் பட்டறைகுளம் கரையோரம் செல்லும் சாலையில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பிரசித்தி பெற்ற விநாயகர்கோயில் ஒன்று உள்ளது இந்த கோயிலும் இரவு பகல் என எந்தநேரத்திலும் பக்தர்கள் வந்தவண்ணம் இருப்பார்கள். அதேபோல் இந்த சாலை வழியாக கிட்டங்கி தெரு சென்று அங்கிருந்து பல பகுதிக்கு செல்ல இந்த சாலையை அதிகளவில் சுற்று பகுதியை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் சென்று வர ரொம்ப ஈசியாக இருக்கும் இந்த சாலை தற்பொழுது பெண்கள் பயன்படுத்த முடியாதளவில் உள்ளது. சாலை நெடுவேங்கும் கருவை மரங்கள் படர்ந்துள்ளது. சாலையும் மக்கள் நடந்து செல்ல முடியாதளவில் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் உள்ள மின் கம்பங்களில் உள்ள விளக்குகளும் எரியாததால் இரவில் இருண்டு காணப்படுகிறது இதனால் மக்கள் அச்சத்துடன் செல்கிறனர்.

அதேபோல் சாலையோரம் சுற்று பகுதியை சேர்ந்த பலர்தங்களது கழிவு பொருட்களையும் இங்குவந்து கொட்டி வருகின்றனர். குறிப்பாக பஸ்கள்நிலையம் பகுதியில் இருக்கும் பழக்கடைகள் தங்களது வீணாகிய பழங்களை இங்கு வந்து கொட்டுகின்றனர்.இதனால் இப்பகுதியில் மிகப்பெரிய சுகாதார சீர்க்கேடு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். அதேபோல் பஸ்கள்நிலையத்திற்கு வரும் மக்களும் அப்பகுதியில் கடைகள் வைத்திருப்பவர்களும் சிறுநீர்மற்றும் இயற்கை உபாதைகளை இங்கு வந்து கழிப்பதால் ஆங்காங்கே மனிதர்களின் மலங்கள் சிதறி கிடக்கிறது இதன் மூலம் பலவிதமான தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக தனியார் வங்கி பின்புறம் உள்ள திண்ணை போன்ற இடத்தைதான் குடிமகன்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த சாலையில் உள்ள ஒரு புளியமரத்தின் கீழ் சிலர்மதுபானங்களையும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர்அதேபோல் சிலர்சீட்டாட்டத்திலும் ஈடுபடுகின்றனர். இப்பகுதியில் குடியிருக்கும் மக்களும் கோயிலும் வரும் பக்தர்களும் இந்த சாலை அருகே இருக்கும் பள்ளிவாசலுக்கு வரும் இஸ்லாமியர்களும் தயக்கத்துடன் சென்று வருகின்றனர்.

ஆகவே இப்பகுதி மக்கள் நலன் கருதி இப்பகுதியில் உள்ள சாலையோரம் மற்றும் பட்டறைகுளம் சுற்றிலும் உள்ள கருவை மரங்களை அகற்றி அப்பகுதியையும் குளத்தையும் சுத்தம் செய்து தரவேண்டும், குவிந்து கிடக்கும் கழிவுகளை அகற்ற வேண்டும், தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சிக்கும், இப்பகுதியில் கூடும் குடிமகன்களையும் சமூக விரோதிகளையும் கட்டுபடுத்த வேண்டும் என காவல்துறைக்கும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post பட்டறைகுளம் கரையோரம் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: