நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவம் படிக்க சீட் கிடைக்காத விரக்தியில் மாணவன் தற்கொலை

புழல்: புழல், கண்ணப்பசாமி நகர், யாகோப் பிளாக், 27வது தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். துபாயில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மூத்த மகன் சுஜித் (19), சூரப்பட்டில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் கடந்த 2019ம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையில், கடந்த 2019ம் ஆண்டு முதல் நீட் நுழைவு தேர்வு எழுதி வந்தார். ஆனால், தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், இந்தாண்டு எழுதிய நீட் நுழைவுத் தேர்வில்  527 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இதனையடுத்து, மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்து, கலந்தாய்வினை எதிர்பார்த்து, ஆவலுடன் காத்திருந்தார். இதனிடையே, துபாயில் இருந்து விடுப்பில் வந்த ஆனந்தன், தனது மகன் சுஜித்தை, மருத்துவராக ஆக்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு தனியார் மருத்துவ கல்லூரிக்கு சென்று வந்தார். ஆனால், சீட் கிடைக்கவில்லை. இவருக்கு விடுமுறை முடிந்ததால், கடந்த சில நாட்களுக்கு முன், மீண்டும் துபாய் சென்று விட்டார். மருத்துவ படிப்பில் சேர, சீட் கிடைக்காததால் சுஜித் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.  இந்நிலையில், நேற்று மதியம் விஜயலட்சுமி அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியபோது, தனியாக இருந்த சுஜித், படுக்கை அறை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதார்.தகவலறிந்து வந்த புழல் போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, மருத்துவம் படிக்க கல்லூரியில் சீட் கிடைக்காத விரக்தியில், இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுஜித்தின் செல்போனை பறிமுதல் செய்து, அதனை ஆய்வு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது….

The post நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவம் படிக்க சீட் கிடைக்காத விரக்தியில் மாணவன் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: