நல்லம்பள்ளி அருகே நள்ளிரவில் ஆடு திருடிய 3 வாலிபர்கள் கைது: தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு

நல்லம்பள்ளி, அக்.21: நல்லம்பள்ளி அருகே, கறிக்கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக, நள்ளிரவில் ஆடு திருட முயன்ற 3 வாலிபர்களை, பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பூதனஅள்ளி அண்ணா நகர் பகுதியில் வசிப்பவர் ரங்கநாதன்(48). இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகாமையில் ஆடுகளை கட்டிவிட்டு தூங்க சென்றுள்ளார். நள்ளிரவு 1 மணி அளவில், ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத 3 ேபர் ஆடுகளை திருடி, டூவீலரில் ஏற்ற முயற்சி செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருவரை ரங்கநாதன் டூவீலரில் பிடித்து இழுத்த போது, அந்த நபர் தனது சட்டையை கழட்டி போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

பின்னர், அதிகாலை 4 மணியளவில், டூவீலரை எடுப்பதற்காக மீண்டும் வந்த அவர்கள், ரங்கநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, 3 பேரையும் பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். பின்னர், அதியமான்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சின்னநூலஅள்ளியை சேர்ந்த மாது மகன் பார்த்திபன்(22), உழவன்கொட்டை பகுதியை சேர்ந்த நஞ்சன் மகன் மாரியப்பன்(26), தொழில் மையம் பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் சிரஞ்சீவி(21) என்பது தெரிந்தது.

ஆடு திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

The post நல்லம்பள்ளி அருகே நள்ளிரவில் ஆடு திருடிய 3 வாலிபர்கள் கைது: தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: