தொழில்நுட்ப கல்லூரிகளில் அக்டோபர் 1 முதல் வகுப்புகள் தொடங்கும்: ஏஐசிடிஇ அறிவிப்பு

சென்னை: இயல்பு நிலை திரும்பும் வரை முழுக்கட்டணத்தை செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர்த்து பிற வகுப்புகளுக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ)  தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாகப் 2021-2022 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 2021-2022 கல்வி ஆண்டுக்கான கால அட்டவணை திருத்தி வெளியிடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் புதிய கால அட்டவணையை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது.புதிய கால அட்டவணையில் கூறப்பட்டுள்ளதாவது: தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், முதுகலை மேலாண்மை நிறுவனங்கள், தொலைதூரக் கல்வி, ஆன்லைன் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை அங்கீகாரத்தைப் பெற இன்று கடைசி நாள் ஆகும். அதேபோல பல்கலைக்கழகங்கள்  கல்லூரிகளுக்கான இணைப்பை வழங்க ஆகஸ்ட் 10 கடைசித் தேதி ஆகும். 2021- 22ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு செப்டம்பர் 30ம் தேதி முடிவுபெறும். தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். முதலாம் ஆண்டு தொழில்நுட்பப் படிப்புகளுக்கான வகுப்புகள் அக்டோபர் 25ம் தேதி தொடங்குகின்றன. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தரும் வகையில் தொழில்நுட்பப் படிப்புகளின் இடங்களைத் திரும்பப் பெற அக்டோபர் 15 கடைசி தேதி ஆகும்.முதுகலை மேலாண்மைப் படிப்புகளுக்கான கால அட்டவணை மாற்றப்படவில்லை. அதன்படி முதுகலை மேலாண்மை நிறுவனங்கள் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் வகுப்புகளை தொடங்கலாம். அதற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 11 கடைசித் தேதி ஆகும். முழுக் கட்டணத்தையும் திருப்பித் தரும் வகையில் முதுகலை மேலாண்மைப் படிப்புகளின் இடங்களைத் திரும்பப் பெற ஆகஸ்ட் 6 கடைசித் தேதி ஆகும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இணையவழி அல்லது நேரடியாக அல்லது இரண்டு முறைகளையும் பின்பற்றி வகுப்புகளைத் தொடங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.* கட்டணத்தை 4 தவணையாக வசூலிக்கலாம்ஏஐசிடிஇ வெளியிட்ட அறிவிப்பில், ‘‘கொரோனா தொற்று குறைந்து இயல்பு நிலை  திரும்பும் வரை மாணவர்களை முழுக் கல்விக் கட்டணம் செலுத்த கல்வி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. மாணவர்களிடம் கட்டணத்தை 4 தவணைகளில் வசூலிக்க வேண்டும். கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை எக்காரணம் கொண்டும் வேலையிலிருந்து நீக்கக் கூடாது. அவ்வாறு நீக்கப்பட்டிருந்தால் அந்த உத்தரவுகளைக் கல்லூரிகள் திரும்பப் பெற வேண்டும்.  பேராசிரியர்களுக்குரிய மாத ஊதியத்தை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது….

The post தொழில்நுட்ப கல்லூரிகளில் அக்டோபர் 1 முதல் வகுப்புகள் தொடங்கும்: ஏஐசிடிஇ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: