திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

திருவள்ளூர், ஜன. 8: தமிழ்நாடு அரசு சட்டசபையில் ‘பிளாஸ்டிக்களுக்கு எதிரான மக்கள் பிரசாரம்’ செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்குதாரர்களை அழைத்து இதுகுறித்து பொதுமக்களிடையே பிரசாரம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 2021ல் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற மக்கள் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

மாநிலம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “மீண்டும் மஞ்சப்பை” பிரசாரத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் நடத்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் துறை மூலம் 6 மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்த மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தில் ₹10 செலுத்தி ஒரு மஞ்சப் பையை பெற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் நடமாட்டத்தை குறைக்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் கடை கடையாகச் சென்று பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதமும் விதித்தனர். பங்க் கடை, பேன்சி ஸ்டோர், மளிகை கடை, உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்தால் அதிகாரிகள் ஆய்வு செய்து, அபராதம் விதிப்பதுடன், இனி தொடர்ந்து உபயோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து வருகின்றனர். இதனால் பொது மக்கள் வீட்டிலிருந்தே மஞ்சப் பை அல்லது வேறு ஏதேனும் பையை கொண்டு வந்து பொருட்களை வாங்கிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.

காய்கறி வாங்குவதாக இருந்தாலும் சரி, உணவுப் பொருட்களை வாங்கிச் சென்றாலும் சரி ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை பயன்பாட்டில் இல்லாததால், பொது மக்கள் வீட்டிலிருந்தே பையை கொண்டு வந்தே ஆக வேண்டும் என்ற நிலை உருவானது. ஆனால் காலப்போக்கில் பிளாஸ்டிக் பைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாமலும், ஆய்வு செய்யாமல் இருப்பதாலும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை நடமாட்டம் தற்போது அதிகரித்து வருகிறது.  எனவே தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை மீண்டும் தொடர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கடை, கடையாகச் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: