சென்னை: பொங்கல் பரிசு வழங்கும் ரேஷன் கடைகளில் அதிமுகவினர் பேனர்கள் வைத்துள்ளதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்த திமுக தரப்புக்கு புதிய மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பொங்கல் பரிசு தொகையாக அரிசி அட்டைத்தாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஜனவரி 4 ம் தேதி முதல் பரிசு தொகை பெறுவதற்கான டோக்கனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களின் படங்கள் மற்றும் அதிமுக கட்சியின் சின்னம் இடம் பெற்றுள்ளது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராம்மூர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, அரசின் அதிகாரபூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்குமாறு ரேஷன் கடைகளுக்கு 2 சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், பொங்கல் பரிசு டோக்கன்களில் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள், பெயர்கள் இடம்பெற கூடாது என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி முன்பு திமுக தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசின் உத்தரவாதத்திற்கு முரணாக பொங்கல் பரிசு வழங்கப்படும் ரேஷன் கடைகளின் முன்பு அதிமுகவினர் பேனர்களை வைத்துள்ளனர் என்று கூறி அது தொடர்பான புகைப்படங்களை காண்பித்தார். மேலும், இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய அனுமதி கோரினார். புகைப்படங்களை பார்த்த தலைமை நீதிபதி இது குறித்து அரசு பிளீடருக்கு தெரிவித்துவிட்டு மனு தாக்கல் செய்யலாம் என்று அனுமதியளித்தனர்.