திரளான பக்தர்கள் தரிசனம்; திருமயம் அருகே தந்தைக்கு கோயில் கட்டிய ஓய்வுபெற்ற ஐஜி

திருமயம், ஏப்.6: திருமயம் அருகே உள்ள கடியாபட்டி கானப்பேட்டை பகுதியில் ஓய்வு பெற்ற ஐஜி மற்றும் அவரது சகோததர்கள் தந்தை மீது கொண்ட பாசத்தால் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கானப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஐஜி பெரியய்யா. இவருக்கு மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள் உள்ளனர். இவர்களது தந்தை நல்ல குருந்தப்பன்சுவாமிகுரு (90) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர் சிவ பக்தராக இருந்ததாகவும், ஓலைச்சுவடிகள் படித்து பலருக்கும் நல்ல வாக்கு சொல்லி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தந்தை மீது கொண்ட பாசத்தால் அவரது மகன்களான ஓய்வு பெற்ற ஐஜி பெரியய்யா மற்றும் அவரது சகோதரரான நியூயார்க்கில் உள்ள ராஜன் குருந்தப்பன் ஆகியோர் இணைந்து சொந்த ஊரான கானப்பேட்டை கிராமத்தில் தங்களின் நிலத்தில் தந்தை பெயரில் கோயில் கட்டி கருவறையில் சிவன் சுவாமியையும், கருவறைக்கு வெளியே நல்ல குருந்தப்பன்சுவாமிகுருவின் சிலையையும் நிறுவி உள்ளனர்.

இக்கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. தந்தை மீது கொண்ட பாசத்தாலும் அவர் பலருக்கும் குருவாகத் திகழ்ந்ததாலும் அவருக்கு சிலை அமைத்து கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து ஓய்வு பெற்ற ஐஜி பெரியய்யா மற்றும் அவரது சகோதரர் கூறுகையில், எங்களது தந்தை சிவ பக்தர். அவர் பலருக்கும் ஓலைச்சுவடிகளை வாசித்து நல்ல வாக்குகளை சொல்லி பலரும் நன்றாக உள்ளனர். அவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் அவருக்கு கோயில் கட்ட திட்டமிட்டு கடந்த ஏழு ஆண்டு காலமாக எங்களது சொந்த நிலத்தில் கோயில் கட்டி அவருக்கு சிலை அமைத்து கருவறையில் அவர் சிவன் பக்தன் என்பதால் சிவன் சுவாமியையும் நிறுவி நேற்று கும்பாபிஷேகம் செய்துள்ளோம். பெற்றோரை அனைவரும் மதிக்க வேண்டும். தந்தை சொல் தான் மந்திரம் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட தந்தையின் சொல்லை கேட்டு அனைவரும் நடக்க வேண்டும். தாய் தந்தையை மதிக்கவில்லை என்றால் அவர்கள் நல்ல பிள்ளையாக இருக்க முடியாது. அதனால் அவர்களை மதித்து நடக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

The post திரளான பக்தர்கள் தரிசனம்; திருமயம் அருகே தந்தைக்கு கோயில் கட்டிய ஓய்வுபெற்ற ஐஜி appeared first on Dinakaran.

Related Stories: