தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் :தமிழக சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை:தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கத்தின் 3வது அலையை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர், அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 1,500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த வாரங்களில் அதிக பரிசோதனையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே தடுப்பூசி போட்டு முடிக்கும் வரை பொதுமக்கள், அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதைப்போன்று கொரோனா பாதிப்பு ஏற்படாதவர்களுக்கு தடுப்பூசி போட்டு அவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குவதும் முக்கியமானது. எனவே மெகா தடுப்பூசி முகாமிலும், வார நாட்களிலும் தடுப்பூசி போடுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 2வது தவணையும் முறையாக போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுகாதார மற்றும் உள்ளாட்சி ஊழியர்கள் கொண்டு முறையாக கண்காணிக்க வேண்டும். தொற்று அதிகரிக்கும் இடங்களில், பதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது….

The post தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் :தமிழக சுகாதாரத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: