தனியார் தொழிற்சாலையில் ரசாயனம் கசிந்து தீ விபத்து 2 லாரிகள் எரிந்து நாசம்: பூந்தமல்லி அருகே பரபரப்பு

 

பூந்தமல்லி, ஜூலை 29: பூந்தமல்லி அருகே ரசாயனம் கசிந்து ஏற்பட்ட தீவிபத்தில் 2 லாரிகள் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் லாரிகளில் மூலப்பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், இப்பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் தொழிற்சாலைக்கு தின்னர் என்ற ரசாயனத்தை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்தது.

அப்போது, தொழிலாளர்கள் கன்டெய்னர் லாரியில் இருந்த ரசாயன கேன்களை மற்றொரு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கேன் கீழே விழுந்ததில் கன்டெய்னர் லாரி திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள்ளாக கன்டெய்னர் லாரியில் இருந்த தீ அருகே நின்றிருந்த மற்றொரு லாரியின் மீதும் பரவி எரியத் தொடங்கியது.

இதையடுத்து, லாரிகள் தீப்பிடித்து எரிவதைக் கண்ட சக ஓட்டுநர்கள், தொழிற்சாலையில் நிறுத்தி வைத்திருந்த 40க்கும் மேற்பட்ட லாரிகளை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தினர். மேலும், பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், பூந்தமல்லி, அம்பத்தூர், மதுரவாயல், ஜெ.ஜெ.நகர், ஆவடி, கோயம்பேடு, இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 2 லாரிகளும் எலும்புக்கூடாக காட்சியளித்தது. இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post தனியார் தொழிற்சாலையில் ரசாயனம் கசிந்து தீ விபத்து 2 லாரிகள் எரிந்து நாசம்: பூந்தமல்லி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: