சென்னையில் போக்குவரத்து விதிமீறியதாக 30,383 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: போலீசார் நடவடிக்கை

சென்னை, ஆக.9: சென்னையில் போக்குவரத்து விதிமீறியதாக நடப்பாண்டு ஜூன் மாதம் வரை 30,383 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல், விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, ஆங்காங்கே வாகன சோதனை நடத்தியும், நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் படம் பிடித்தும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றனர். இதற்காக, சென்னை அண்ணா நகரில் முக்கிய 5 சந்திப்புகளில் டிராஸ் என்ற கேமரா வைக்கப்பட்டு, அது எடுத்து அனுப்பும் புகைப்படம் மூலமும், விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும், பல இடங்களிலும் இந்த டிராஸ் கேமரா பொருத்தப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்கள், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்கள், சிக்னலில் நிறுத்த கோட்டை தாண்டி சாலையில் வாகனத்துடன் நிற்பவர்கள், ஒருவழிப் பாதையில் வாகனத்தில் செல்பவர்கள், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டுபவர்கள், வாகனத்தை வைத்து ரேஸில் ஈடுபடுபவர்கள் உள்பட பல்வேறு வகையான போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் சென்னை முழுவதும் ஏஎன்பிஆர் எனப்படும் அதிநவீன தானியங்கி கேமராக்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
இந்த ஏஎன்பிஆர் கேமராக்கள் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் பதிவு எண்களை துல்லியமாக படம்பிடித்து அதை போக்குவரத்து போலீசாருக்கு அனுப்பி வைக்கும்.

அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து விதிமீறும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சம்மந்தப்பட்ட நபர்களின் செல்போனுக்கே போலீசார் அனுப்பி வைப்பார்கள். அத்துடன் அபராத சலானையும் இணைத்து அனுப்பி விடுவார்கள். இப்படி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்த காரணத்தால், சென்னையில் விபத்துக்கள் கணிசமாக குறைந்துள்ளன. இதேபோல், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் புகைப்படங்களை எடுத்து போக்குவரத்து காவல் துறையில் டிவிட்டர் பக்கத்தில் புகார் அளித்தால், அதுகுறித்தும் விசாரணை நடத்தி, போக்குவரத்து போலீசார், விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

அதை தொடர்ந்து, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை துல்லியமாக கண்டுபிடித்து அபராதம் விதிக்க 360 டிகிரியில் சுழலும் அதிநவீன கேமரா வசதியுடன் கூடிய 2டி ரேடார் அமைப்புள்ள ரோந்து வாகனத்தை சென்னை போக்குவரத்து காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக இப்படி ஒரு வாகனத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. அபராத தொகையும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணமின்றி வாகனம் ஓட்டினால் ₹5,000, தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ₹1000, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் ₹1000, சரக்கு வாகனங்களில் அதிக சுமை ஏற்றிச் சென்றால் ₹20,000 அபராதம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபர்களுக்கு ₹10,000 என அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில், நடப்பாண்டு ஜூன் மாதம் வரை போக்குவரத்து விதிகளை மீறியதாக 30,383 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில், அதிக வேகத்தில் சென்றதாக 7,057 பேர், வாகனம் இயக்கும்போது போன் பயன்படுத்திய 6748 பேர், மதுபோதையில் வாகனம் இயக்கிய 2272 பேர், சிகப்பு விளக்கை மதிக்காமல் சென்ற 8336 பேரின் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் போக்குவரத்து விதிமீறியதாக 30,383 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: