காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கால் நெரிஞ்சிப்பேட்டை பூலம்பட்டி படகு போக்குவரத்து நிறுத்தம்

பவானி: காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால்  அம்மாபேட்டை அருகேயுள்ள நெரிஞ்சிப்பேட்டை  பூலாம்பட்டிக்கு இடையிலான  படகுப் போக்குவரத்து ஐந்தாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இவ்வழியே  வழக்கமாக பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  மேட்டூர்  அணை நிரம்பியதால், கடந்த 22ம் தேதி முதல் உபரிநீர் காவிரி ஆற்றில்  தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், சேலம், ஈரோடு மற்றும்  நாமக்கல் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தாழ்வான பகுதியில் வசிப்போர், மேடான பகுதிக்குச் செல்லுமாறும், ஆற்றில் துணி துவைக்கவோ, குளிக்கவோ செல்லக் கூடாது என  தொடர்ந்து தண்டோரா போட்டும், ஒலிபெருக்கி மூலமாகவும் எச்சரித்து வந்தனர்.

மேலும்,  ஆபத்து நிறைந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அடுத்து உள்ள நெரிஞ்சிபேட்டை  படகுத் துறையிலிருந்து, காவிரி ஆற்றின் எதிர் கரையான சேலம் மாவட்டம்,  பூலாம்பட்டிக்கு இயக்கப்படும் படகுப் போக்குவரத்து கடந்த 22ம் தேதி முதல்  நிறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி  வரையில் நடைபெறும் படகு போக்குவரத்தை வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி  மாணவ, மாணவியர் ஈரோடு, மேட்டூர் செல்வோர் பெரிதும் நம்பியுள்ளனர்.

பூலாம்பட்டியிலிருந்து சாலை மார்க்கமாக சுற்றிச் செல்வது தொலைவு என்பதால் எளிதில் நடக்கும் படகுப் போக்குவரத்தை அதிகம் விரும்பும்  நிலை உள்ளது.  இந்நிலைில், காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி படகு இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வழக்கமாகச் செல்லும் பயணிகள், படகுத்துறைக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மேலும், பலர் நெரிஞ்சிப்பேட்டை கதவணை மின்நிலையம் பாலம் வழியாக இரு சக்கர வாகனங்கள் மூலமும், கோனேரிபட்டி கதவணை மின்நிலையம் பாலம் வழியாகவும் சென்று வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: