சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் வரும் 13ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்களில் அநேக இடங்களில் மழையும் பெய்யக்கூடும்.
இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும். சிவகங்கை மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஜனவரி 12ம் தேதி (நாளை) நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஜனவரி 13ம் தேதி தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.