கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில்பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கோவில்பட்டி, ஏப். 6: கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான பங்குனி பெருந்திருவிழா, நேற்று காலை 7 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் மீன லக்கனத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜை, 6 மணிக்கு சிறப்பு பூஜை, 7.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடிமரம், நந்தி, பலி பீடம் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை பட்டர்கள் செண்பகராமன், ரகு, சுரேந்தர் ஆகியோர் செய்தனர்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி, கம்மவார் சங்க தலைவர் அரிபாலன், செயலாளர் அழகிரிசாமி, பொருளாளர் ராதாகிருஷ்ணன், துணை தலைவர்கள் பட்டுராஜன், ஜெனரேஷ், யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், இணை செயலாளர்கள் லட்சுமணன், செந்தில்குமார், துணை செயலாளர்கள் மாரிச்சாமி, அய்யலுசாமி, சட்ட ஆலோசகர்கள் பால்ராஜ், ரெங்கராயலு, திமுக ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ராஜகுரு, முன்னாள் உறுப்பினர் திருப்பதிராஜா மற்றும் சண்முகராஜா, மாரிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 4 மணியளவில் திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப்பணி விடை, பலிநாதர் அஸ்திரதேவர் வீதியுலா நடந்தது.

வருகிற 15ம் தேதி வரை 11 நாட்கள் திருவிழா நடக்கிறது. விழா நாட்களில் பல்வேறு சமுதாய மண்டகபடிதாரர்கள் சார்பில் தினமும் காலை 8 மணி, இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரம், பல்லக்கு மற்றும் காமதேனு, அன்னம், ரிஷிபம், கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது. வரும் 13ம் தேதி கம்மவார் சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் காலை 9.15 மணிக்கு தேரோட்டம், இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரி, 14ம் தேதி ஆயிரவைசிய காசுக்கார செட்டிப்பிள்ளைகள் சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி திருவிழா, 15ம் தேதி நாடார் உறவின்முறை சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் இரவு 7 மணிக்கு கோயில் அருகேயுள்ள தெப்பக்குளத்தில் தெப்ப தேரோட்டம், அன்றிரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, உதவி ஆணையர் சங்கர் ஆகியோர் செய்துள்ளனர்.

The post கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில்

பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: