கொள்ளிடம் அருகே, கடல் கொந்தளிப்பால் பழையாறு மீனவர்கள் 10 நாளாக கடலுக்கு செல்லவில்லை: 2000 தொழிலாளர்களும் பாதிப்பு

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் மூலம் 350 விசை படகுகள் 400 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் தினந்தோறும் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். பழையாறு கிராமத்தில் உள்ள கோடீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் செய்வதற்காக பழையாறு மீனவர்கள் 5000 பேர் கிராம கட்டுப்பாட்டின் காரணமாக கடந்த 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெறும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. அதனைத் தொடர்ந்து வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதையொட்டி மீன்பிடி துறை உத்தரவினால் மீனவர்கள் மீண்டும் 8ம் தேதி முதல் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர். மீன்பிடி துறையிலிருந்து மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையினால் மீன்பிடிக்க செல்லாமல் 15ம் நாளான நேற்று வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் பழையாறு துறைமுகத்தின் மூலம் கடலுக்குள் சென்று வரும் 5000 மீனவர்கள் நேற்று வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர். இந்த துறைமுக வளாகத்தில் மீன் வலை பின்னுதல், மீன்களை பதப்படுத்துதல், கருவாடு உலரவைத்தல், கருவாடு விற்பனை செய்தல், சில்லறை விற்பனையில் ஈடுபடுதல், வெளியூர்களுக்கு வாகனங்களில் மீன்களை அனுப்பி வைத்தல், ஐஸ்கட்டி தயாரித்தல், தூய்மை பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவரும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர். இதுகுறித்து பழையாறு மீனவர்கள் சார்பில் விசைப்படகு உரிமையாளர் பொன்னின்செல்வன் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பழையாறு துறைமுகத்தை ஒட்டி முகத்துவாரத்தில் தண்ணீர் வேகமாக சென்று கலந்து வந்தது. இதனால் துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் செல்லும் விசைப்படகுகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் ஆறு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக ஆறுமுறையும் தண்ணீர் வடியும் வரை கடலுக்குள் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயில் கும்பாபிஷேகத்திற்காக 2ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரை ஒரு வார காலம் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க வில்லை. பின்னர் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதன் காரணமாக மீன்பிடி துறை உத்தரவின் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க செல்லவில்லை. இதுவரை பழையாறு மீனவர்கள் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாகவும், கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதன் காரணமாகவும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இதுவரை 60 நாட்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாததால் விசைப்பட உரிமையாளர்களும் தொழிலாளர்களும் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஒவ்வொரு மீனவருக்கும் இழப்பீட்டுக்கு தகுந்தார்போல் உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றார். கடந்த 2ம் தேதியிலிருந்து நேற்று வரை பழையாறு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்காததால் மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்….

The post கொள்ளிடம் அருகே, கடல் கொந்தளிப்பால் பழையாறு மீனவர்கள் 10 நாளாக கடலுக்கு செல்லவில்லை: 2000 தொழிலாளர்களும் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: