வகுப்பறையில் கையை அறுத்து கொண்ட நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் திருமால்(21). இவர் சென்னை நெற்குன்றம் கிருஷ்ணா நகரில் அறை எடுத்து தங்கி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஒருவாரமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று முன்தினம் கல்லூரி வகுப்பு அறையில் திருமால் தனது இடது கை மணிகட்டை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த சக மாணவர்கள் திருமாலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் இதுகுறித்து பேராசிரியர்கள் திருமாலிடம் விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை முயற்சி குறித்து அவர் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று மாலை ெநற்குன்றத்தில் உள்ள அறையில் இருந்து திருமால் வெகு நேரமாக அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த சக நண்பர்கள் அறையின் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது திருமால் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது அறையை சோதனை செய்த ேபாது கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில்” நான் கெட்டவன், இந்த உலகத்தில் வாழ தகுதி இல்லாதவன். அம்மாவை நன்றாக பார்த்து கொள்ள முடியவில்லை. அடுத்த ஜென்மத்தில் நான் அம்மாவை நன்றாக பார்த்து ெகாள்கிறேன்” என்ற எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் மருத்துவ கல்லூரி மாணவன் தற்கொலை குறித்து அவரது செல்போனை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கல்லூரியில் பேராசிரியர்கள் யாரேனும் டார்ச்சர் கொடுத்தார்களா? அல்லது காதல் விவகாரமா என்பது குறித்து போலீசார் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ கல்லூரி மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிர் போக கல்லூரி நிர்வாகம் காரணமா?

மாணவன் நேற்று முன்தினம் கல்லூரி வகுப்பறையில் கையை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சி செய்திருந்தார். இந்தநிலையில் கல்லூரி நிர்வாகம் அதுகுறித்து பெரிதாக கவனம் செலுத்தாமல், மாணவனை கண்காணிக்காமலும் விட்டதால், நேற்று மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கல்லூரியின் அலட்சியத்தால் தான் மாணவனின் உயிர் போனதாக சக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: