கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு

 

சென்னை, ஏப்.21: கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து செஞ்சிக்கு சென்றபோது பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த அரசு பஸ் கண்டக்டரை சஸ்பெண்ட் செய்து வேலூர் பொதுமேலாளர் உத்தரவிட்டார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

இதில் நேற்று முன்தினம் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் 102 ஏசிஹெச் அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி சென்றது. பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண், 2 ஆண்கள் என 3 பேர் செஞ்சிக்கு பஸ் டிக்கெட் கேட்டுள்ளனர். பஸ்சில் இருந்த கண்டக்டர் ராமசாமி, செஞ்சிக்கு பதிலாக திருவண்ணாமலை டிக்கெட்டிற்கான கட்டணத்தை வசூலித்துள்ளார்.
இதுகுறித்து, பயணிகள் விழுப்புரம் கோட்ட மேலான் இயக்குனருக்கு புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரிக்க வேலூர் போக்குவரத்து மண்டல பொதுமேலாளர் ஹெட்வினுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, நடத்திய விசாரணையில், கிளாம்பாக்கம்-செஞ்சிக்கு ரூ.130 கட்டணத்திற்கு பதிலாக கிளாம்பாக்கம்-திருவண்ணாமலைக்கான ரூ.175 பயணச்சீட்டை வழங்கி கூடுதலாக ரூ.45 கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து, கூடுதல் கட்டணம் வசூலித்த காரணத்தால் கண்டக்டர் ராமசாமியை சஸ்பெண்ட் செய்து, வேலூர் போக்குவரத்து மண்டல பொதுமேலாளர் ஹெட்வின் நேற்று உத்தரவிட்டார்.

The post கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: