காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1.50 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது:  ஏற்கப்படாத விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு  கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், செப். 17: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1.50 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது என்றும். இதில் ஏற்கப்படாத விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது, தமிழ்நாடு முதலமைச்சரால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் (15ந் தேதி) வெற்றிகரமாக தொடங்கி வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடந்தது. இரண்டு கட்டங்களிலும் விடுபட்டவர்களுக்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு, மொத்தம் 2,77,386 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் சுமார் 1,50,000 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு வங்கி கணக்குகளின் வாயிலாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. மேலும், வங்கி கணக்கு இல்லாத பயனாளிகளுக்கு பணவிடை அஞ்சல் மூலமாக உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் போக மீதமுள்ள விண்ணப்பங்கள் கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்து, விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு நாளை (18ம் தேதி) குறுஞ்செய்தி அனுப்பிவைக்கப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரமறிய, மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தினை தொடர்புகொண்டு விண்ணப்பம் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள், மகளிர் உரிமைத் திட்டத்தில் தான் தகுதியானவர் என கருதும்பட்சத்தில் இ-சேவை மையம் மூலமாகவும் அல்லது சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் மூலமாகவும் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த தகவல்களை மாவட்ட கலெக்டர் அலுவலக உதவி மைய கைப்பேசி எண் 9003758638ஐ அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறியுள்ளார். ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் போக மீதமுள்ள விண்ணப்பங்கள் கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாமில் ₹3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனையடுத்து நடந்த முகாமில், 56 மாற்றுத்திறனாளிடமிருந்து வீட்டுமனை பட்டா, வங்கிக்கடன், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பெற்றார். பின்னர், 1 பயனாளிக்கு கல்வி உதவித்தொகை, 2 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 9 பயனாளிகளுக்கு ஈமச்சடங்கு / இயற்கை மரணமடைந்த மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு நிதியுதவி காசோலை என மொத்தம் ₹3,21,750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளி பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1.50 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது:  ஏற்கப்படாத விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு  கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: