கல்வித்துறையில் நுழைவுத் தேர்வினால் இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? தயாநிதி மாறன் எம்பி கேள்வி

புதுடெல்லி: ‘கல்வித்துறையில் பல்வேறு நுழைவுத்தேர்வுகளினால் இடஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன’ என்பது குறித்து மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்.மக்களவையில் திமுக எம்பி தயாநிதிமாறன் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்வியில் கூறப்பட்டுள்ளதாவது:* கல்வித்துறையில் நுழைவுத் தேர்வினால், இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? கிராமப்புற மாணவர்கள் மற்றும் விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? இதுகுறித்து ஒன்றிய அமைச்சகம் ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.* நடைபெற்றுவரும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளின் முடிவுகளில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த மாணவர்களின் பிரதிநிதித்துவம் குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வு அல்லது அறிக்கை தயார் செய்துள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.* கல்வித்துறையில் நுழைவுத் தேர்வானது இட ஒதுக்கீடு கொள்கையை பாதித்துள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.* இது போன்ற நுழைவுத் தேர்வுகள், நகர்ப்புற மற்றும் பொருளாதார ரீதியாக வலுவான பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் சாதகமான சூழலை உருவாக்குகிறதா? அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.இதற்கு ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் அளித்த பதிலில், ‘‘விளிம்பு நிலை வகுப்பை சார்ந்த முதல் தலைமுறை மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் கல்வி பயில உதவிடும் வகையில் நிதி உதவி வழங்குதல் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை உருவாக்கும் வகையில் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கும் குறிப்பிட்ட இடஒதுக்கீட்டின் சதவீதத்தின் அடிப்படையில் சேர்க்கையை வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. நீட், ஜே.இ.இ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி பெறுவதற்காக தேசிய தேர்வு பயிற்சி என்னும் கைப்பேசி செயலியை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியானது மாணவர்களது மாதிரி தேர்வு முடிவு குறித்த கருத்துக்களை உடனடியாக வழங்குவதால், அவர்கள் எந்தெந்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என உணர்ந்து செயல்பட ஏதுவாக அமைகிறது’’ என தெரிவித்துள்ளார்….

The post கல்வித்துறையில் நுழைவுத் தேர்வினால் இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? தயாநிதி மாறன் எம்பி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: