விடா முயற்சி விஸ்வரூப வெற்றி...... 8 வயது கனவை 88 வயதில் நிறைவேற்றிய விவசாயி

காஞ்சிபுரம்: 8 வயதில் பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்று கனவு கண்டு, அதனை 88 வயதில் நினைவாக்கியுள்ள விவசாயி தேவராஜனின் விடாமுயற்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தேவராஜன். இவர் தனது சிறு வயதில் சைக்கிளில்தான் பயணம் செல்வார். ஒருநாள் தேவராஜன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, தன்னை முந்திச் சென்ற காரைப் பார்த்துள்ளார். அந்தக் காரின் தோற்றம் அவரை மிகவும் ஈர்த்துள்ளது. அந்த காரின் பெயர் கூட தேவராஜனுக்குத் தெரியாது.  ஆனால் அவரைக் கடந்து சென்ற காரின் லோகோ அவரின் மனதில் மிக ஆழமாகப் பதிந்து விட்டது. அப்போது அவருக்கு வயது 8. தேவராஜன் அந்தக் காரை வாங்க வேண்டும் என்பதையே தன் வாழ்நாள் கனவாக வாழ்ந்து வந்தார். தேவராஜனின் மனதைக் கவர்ந்த கார் 3 ஸ்டார்களை லோகோவாகக் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் கார்.

தேவராஜன் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரும் அதனையே தனது தொழிலாக செய்து வந்தார். ஆனால் அவரது கார் வாங்கும் கனவு மட்டும் அவரை விட்டுப் போகவில்லை. தேவராஜ் தற்போது 88 வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். தனது 88-வது பிறந்தநாளில் தேவராஜ் தன் 8 வயது கனவை நனவாக்கியுள்ளார். ஆம் 8 வயதில் பார்த்து வாங்க நினைத்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கி அசத்தியுள்ளார். தேவராஜின் கனவு நிறைவேற அவரது குடும்பத்தினரும் உறுதுணையாக இருந்துள்ளனர். அதனாலேயே அவரது கனவு நனவானது. ஏழை விவசாயியான தேவராஜ் தற்போது வெள்ளை நிற பி-கிளாஸ் மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

தேவராஜின் 8 வயது கனவை 88 வயதில் நனவாக்கியுள்ளார் என்பதை அறிந்த சென்னையிலுள்ள பென்ஸ் கார் ஷோரூம், அவரும், அவரது குடும்பத்தினரும் கார் வாங்க ஷோரூமுக்குள் நுழைவது முதல், காரை வாங்கி செல்வது வரை அனைத்தையும் வீ டியோவாகப் பதிவு செய்து வெளியிட்டு, தேவராஜுக்கு மரியாதை செலுத்தியுள்ளது. விவசாயி தேவராஜுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. கனவு காண்பதுடன் நிறுத்தி விடாமல், கடுமையாக உழைத்து, முயற்சி திருவினையாக்கும் என்பதை நிரூபித்துள்ள விவசாயி தேவராஜுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: