ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை கைலாசநாதர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

ஓட்டப்பிடாரம், மே4: பசுவந்தனை கைலாசநாதர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று வெகுசிறப்பாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பசுவந்தனையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆனந்தவல்லி உடனுறை கைலாசநாதர் சித்திரை திருவிழா கடந்த ஏப்.25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு சப்பரங்களில் திருவீதி உலா நடந்தது. 9ம்நாளான நேற்று முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடந்தது. காலை 9 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் சுவாமி, அம்பாள் திருத்தேர் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது.தொடர்ந்து 9.50 மணிக்கு பக்தர்களின் நமச்சிவாய கரகோஷத்துடன் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த தேர் பகல் 11.10க்கு மணிக்கு நிலைக்கு வந்தது.

இதில் நாகம்பட்டி பண்ணையார்கள் ராமானுஜம் கணேஷ், சுதாகர், அறநிலையத்துறை செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, பஞ்சாயத்து தலைவர்கள் லட்சுமிசிதம்பரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், கோயில் எழுத்தர் பாலமுருகன், பசுவந்தனை மற்றும் சுற்று பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.10நாள் திருவிழாவான இன்று (4ம்தேதி) காலை தீர்த்தவாரியும், மதியம் சுவாமி, அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது. 11ம் நாளான நாளை (5ம்தேதி) இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், பட்டணப்பிரவேசம் ஆகியன நடக்கிறது.

இதேபோல் ஓட்டப்பிடாரத்தில் நடந்த சிவன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தை பஞ்சாயத்து தலைவரும், திமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான இளையராஜா வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். இதில் முன்னாள் எம்எல்ஏ சிவபெருமாள், அதிமுக நிர்வாகி கொம்பு மகாராஜா, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பணியாளர்கள், வியாபாரிகள் சங்க பிரமுகர்கள் உள்ளிட்ட ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்று கிராமத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

The post ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை கைலாசநாதர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: