ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் : மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

புதுடெல்லி : கொரோனா நோய் தொற்று குறைந்து இருப்பதை அடிப்படையாகக் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளாக அனைத்து மாநில அரசுகளும் முழு மற்றும் பகுதி நேர ஊடங்கை அறிவித்துள்ளது. இதில் கடந்த இரண்டரை மாதங்ககளுக்கு பின்னர் தற்போது நோய் தொற்றின் ஒரு நாள் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் ஆகியவை படிப்படியாக குறைந்து வருவதை தொடர்ந்து, சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வு ஊரடங்கை மாநில அரசுகள் அறிவித்துள்ளது.இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரப்பில் அதன் செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார். அதில்,’ கொரோனா பாதிப்பு குறைவை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கண்காணிப்பை தொடர்ந்து தீவிரப்படுத்து வேண்டும். இதில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசிகள் அலட்சியம் காட்டிவிடக் கூடாது. குறிப்பாக மக்களின் வாழ்வாதாரத்திற்கு தளர்வுகள் என்பது அவசியம் தான், இருப்பினும் கண்காணிப்பை தவறவிட்டால் மீண்டும் ஆபத்தாகி விடும். அதேப்போன்று கொரோனா பரிசோதனையை தொடர்ந்து மேற்கொள்ளுதல், தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்தல், முகக்கவசம் அணிதலை கட்டாயப்படுத்தல், கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் அறைகளில் சவுகரியமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இதனை மாநில அரசுகளின் தலைமை செயலாளர் கருத்தில் கொண்டு கண்கானிக்க வேண்டும்இதில் முக்கியமாக சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கும் போது சந்தை மற்றும் வியாபார செய்யும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவை வைரஸ் தொற்று மீண்டும் தீவிர பரவலுக்கு செல்ல வழிவகுக்கும் என்பதால், விதிமுறைகளை கடைபிடிப்பதில் பொதுமக்களுக்கு எந்தவித விலக்கோ அல்லது சமரசமோ இருக்கக் கூடாது. மேலும் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் ஆரம்ப கட்டத்திலே கண்டறிந்து மைக்ரோ லெவல் குழுக்கள் மூலம் பரவலை குறிக்க உள்ளூர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி என்பது தற்போதைய சூழலில் பரவலை குறைக்க மிக முக்கியமானது என்பதால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் : மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: