உதவி பதிவுத்துறை தலைவர் நிலைக்கு 22 மாவட்ட பதிவாளர் பணியிடத்தை தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு: சங்கங்கள், சீட்டு நிறுவனங்களை கண்காணிக்க அதிரடி

சென்னை: சங்கங்கள், சீட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க செங்கல்பட்டு உள்பட 22 மாவட்ட பதிவாளர் பணியிடங்களை உதவி பதிவுத்துறை தலைவர் நிலைக்கு தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சிட்பண்ட் நிறுவனம் நடத்துவோர் மற்றும் ஏலச்சீட்டு நிறுவனங்கள் பதிவுத்துறை சீட்டு பதிவு அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். இதற்காக, சீட்டு நடத்தப்படும் தொகை, சீட்டு முடியும் காலம் வரை உரிய தொகையை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கான ஆவணத்தை பதிவுத்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு 5 ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட ஏலச்சீட்டுகளை நடத்த வேண்டும். இல்லையெனில் அது சட்டத்துக்கு புறம்பான சீட்டு என்றே கருதப்படும். இந்த சீட்டு நிறுவனங்களில் சேரும் சந்தாதாரர்களால் செலுத்தப்படும் பணத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் நோக்கில், மாநிலத்தில் உள்ள பதிவு பெற்ற சீட்டு நிறுவனங்களின் செயல்பாடு பதிவுத்துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, கூட்டுறவு சங்கம், குடியிருப்போர் சங்கம், அரசு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட எந்த சங்கமாக இருந்தாலும் பதிவு செய்ய வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் 7 பேருக்கு குறையாமல் உறுப்பினர்களை கொண்ட இந்த சங்கத்தை மாவட்ட பதிவாளரிடம் பதிவு செய்து கொள்ளலாம். இந்த சங்கங்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை செயற்குழு கூட்டத்தை நடத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு முறையாவது பொதுக்குழு கூட்டத்தை நடத்தி தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, மாவட்ட பதிவாளர் ஆய்வு செய்கிறார். இதற்காக, ஒவ்வொரு மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அவர்கள் மூலம் சீட்டு மற்றும் சங்கங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சங்கங்கள், சீட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை திறம்பட கண்காணிக்க மாவட்ட பதிவாளர்  நிர்வாக பணியிடங்களை உதவி பதிவுத்துறை தலைவர் நிலைக்கு தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, பெரிய குளம், திருவண்ணாமலை, ஊட்டி விழுப்புரம், விருதுநகர், ராணிப்பேட்டை ஆகிய 22 மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) பணியிடங்கள் உதவிப்பதிவுத்துறை தலைவர் நிலைக்கு தரம் உயர்த்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …

The post உதவி பதிவுத்துறை தலைவர் நிலைக்கு 22 மாவட்ட பதிவாளர் பணியிடத்தை தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு: சங்கங்கள், சீட்டு நிறுவனங்களை கண்காணிக்க அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: