ஈரோட்டில் 38வது தேசிய புத்தக கண்காட்சி மாநகராட்சி துணை மேயர் துவக்கி வைத்தார்

 

ஈரோடு, டிச.31: ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலை வணிக வரி அலுவலகம் முன் மத்திய அரசு நிறுவனமான நேஷனல் புக் டிரஸ்ட், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து 38 வது தேசிய புத்தக கண்காட்சி துவக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு நியூ செஞ்சூரி புக் ஹவுஸ் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் பங்கேற்று, புத்தக கண்காட்சியினை துவக்கி வைத்தார்.

இதில், திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம், புக் ஹவுசின் மண்டல மேலாளர் ரங்கராஜன், மேலாளர் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த புத்தக கண்காட்சியில் தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் 10 ஆயிரம் தலைப்புகளில் இடம் பெற்றுள்ளது. கலை, இலக்கியம், வரலாறு, திறனாய்வு, அரசியல், அறிவியல், சுற்றுச்சூழல், வேளாண்மை, மருத்துவம், கல்வியியல், மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கர் நூல்கள், சிறுவர் இலக்கிய நூல்கள், பொது அறிவு, கட்டுரைகள், அரசு துறை சார்ந்த விஏஓ, டெட், நீட், ஐஏஎஸ், ஐபிஎஸ் நூல்கள் இடம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு எழுதிய ‘என்ன பேசுவது, எப்படி பேசுவது’ என்ற புத்தகமும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், நூலகங்களுக்கும் 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post ஈரோட்டில் 38வது தேசிய புத்தக கண்காட்சி மாநகராட்சி துணை மேயர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: