தனியார் பள்ளிகள் கட்டண அட்டவணையை வெளியிடவில்லை என்றால் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: வெளிமாநில நீட் தேர்வு மையங்கள் தமிழகத்தில் மாற்றி அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்களுக்கான கோடை கொண்டாட்ட நிகழ்ச்சியை அமைச்சர் தொடங்கிவைத்தார். இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரிடம் நீட் தேர்வு குறித்து கேள்வியெழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த அவர், நீட் தேர்வை பொறுத்தவரையில் 9 கல்லூரிகளில் 3,145 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும், எவ்வளவு மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகிறார்கள் என்பது குறித்து வரும் 6ம் தேதி தான் எங்களுக்கு தெரியவரும் என்றும், நீட் பயிற்சி முடிந்து இன்று மாணவர்கள் வீடு திரும்புகின்றனர் என்றும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது, வெளிமாநில நீட் தேர்வு மையங்கள் தமிழகத்தில் மாற்றி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கட்டண விவரங்கள் அடங்கிய பலகைகள், அட்டவணைகளை பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் அவ்வாறு வைக்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும், தனியார் பள்ளிகள் கட்டணத்தை அரசு கண்காணித்து வருகிறது. அதற்காகவே கமிஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீதான புகார் கடிதத்தை அந்த கமிஷனுக்கு அனுப்பினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: