சென்னை : சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதில் ரூ16.17 ேகாடி மதிப்பிலான மாத்திரைகள் காலாவதியாகி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய தணிக்கை துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் அரசு மருத்துவமனைகள் தங்களுக்கு தேவையான மருந்துகளை பூர்த்தி செய்து கொள்கின்றன. அரசு மருத்துவமனைக்கு வினியோகிப்பதற்காக மருத்துவ பணிகள் கழகம் மருந்துகளை கொள்முதல் செய்து மாநிலத்தின் 29 இடங்களில் உள்ள தங்களது மருந்து கிடங்குகளில் சேமித்து வைக்கின்றன. மருத்துவ பணிகள் கழகம் அவசியமான மருந்து பட்டியல், சிறப்பு மருந்து பட்டியல் எனும் இரண்டு மருந்து பட்டியல்களை பராமரிக்கின்றன. அவசியமான மருந்து பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மருந்துகள் கடந்த ஆண்டுகளின் பயன்பாட்டிற்கு அடிப்படையிலும், சிறப்பு மருந்து பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மருந்துகள் மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட தேவைகளின் அடிப்படையிலும் கொள்முதல் செய்யப்படுகின்றன.
நவம்பர் 2013 அவசியமான மருந்து பட்டியலில் சேர்க்கப்பட்ட 45 மருந்துகளின் தேவைகளுக்காக மருத்துவ கல்வி இயக்குனருக்கு மருத்துவ பணிகள் கழகம் அழைப்பு விடுத்திருந்தது. மருத்துவ கல்வி இயக்குனர் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து 37 மருத்துவமனைகளிடமிருந்தும் தேவைகளை பெற்று மருத்துவ பணிகள் கழகத்திற்கு அனுப்பியது. முக்கிய மருந்து பட்டியல் மருத்துவ கல்வி இயக்குனரால் வழங்கப்பட்டது. 37 மருத்துவமனைகள் தேவைகளை வழங்கியிருந்த போதும் குறிப்பிட்ட மருந்துகளின் மொத்த தேவைகளில் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தேவை முறையே 82 மற்றும் 99 சதவீதமாக இருந்தது. ஜூன் மற்றும் செப்டம்பர் 2014க்கு இடையே இந்த மருந்துகள் மருத்துவ பணிகள் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த மருந்துகளில் டக்ரோலிமஸ் ரூ9.74 கோடியும், ப்ரோமோகிரிப்டின் ரூ4.51 கோடியும் என ரூ14.25 கோடி (ஜூன் மற்றும் செப்டம்பர் 2016ல் இடையில்) மருந்துகள் காலாவதியானது. இது கொள்முதல் ஆவணங்களின் தணிக்கை பகுப்பாய்வில் வெளியிடப்பட்டது.
சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வரால் இரண்டு பேராசிரியர்களை கொண்டு ஒரு விசாரணை அமைக்கப்பட்டது. இதில் மனித பிழையினால் இது ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. ஆனால், பொறுப்பற்ற அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித மேல்நடவடிக்கையும் எடுக்க வில்லை. முந்தைய ஆண்டு பயன்பாட்டை விட 24 முதல் 189 மடங்கு வரை அதிக கொள்முதல் செய்யப்பட்டது. டிஎம், பயன்பாட்டு முறையுடன் ஒப்பிட்டு தேவைப்பாட்டினை சரிபார்க்காமல் மருத்துவ பணிகள் கழகத்திற்கு மேலனுப்பியது. மருந்துகள் காலாவதியானதிலும், அதைத் தொடர்ந்து ரூ1.92 கோடி இழப்பு ஏற்பட்டதிலும் முடிந்தது. மருத்துவ பண்டக அதிகாரி வழங்கிய அதிகரிக்கப்பட்ட தேவைப்பட்டியல், வரையறுக்கப்பட்ட சரிபார்ப்பதில் கவனக்குறைவு, பயன்பாட்டு முறையை சரிபார்ப்பதில் மருத்துவ பணிகள் கழகத்தின் தவறு மற்றும் 4 மாத தேவைக்கு கொள்முதலை கட்டுப்படுத்தாதது ஆகியவை ரூ16.17 கோடி இழப்பிற்கு வழிவகுத்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!