ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் சிக்கியது கொரியர் வாகனத்தில் 1200 கிலோ குட்கா கடத்தல்-5 பேர் கைது

ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் நூதன முறையில் கொரியர் வாகனத்தில் கடத்த முயன்ற 1200 கிலோ குட்கா சிக்கியது. குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலைய பகுதிகளில் கஞ்சா மற்றும் அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில்  ஆய்வாளர் மீனா தலைமையில் போலீசாரும் தனிப்படை போலீசாரும் ரகசிய தகவலின் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது.  அந்த காரை நிறுத்தியபோது டிரைவர்  நிறுத்தாமல் தப்பி செல்ல முயன்றார் .  சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை சுற்றிவளைத்து விசாரணை நடத்தினர். அப்போது  கொரியர் வாகனம் போன்று ஒரு கூண்டு வண்டியில் குட்கா கடத்தி வருவதாகவும், அதற்காக முன்னால் பாதுகாப்புக்காக செல்வதாகவும், குட்கா ஏற்றி வரும் வாகனத்திற்கு பின்னால் மற்றொரு காரும் பாதுகாப்புக்காக வருவதாகவும் தெரிவித்தார்.உடனே சோதனைச் சாவடியில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.   சிறிது நேரத்தில் கொரியர் ஏற்றி செல்லும்  கூண்டு வாகனமும் அதன் பின்னால் மற்றொரு காரும் வந்தது. போலீசார் இரு வாகனத்தையும் சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது கூண்டு  வாகனத்தில் மூடை மூடையாக  1200 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது. போலீசார் குட்கா, அதை ஏற்றி வந்த கூண்டு வடிவ வாகனத்தையும் பாதுகாப்புக்காக வந்த இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு குட்கா கடத்திச் செல்வது தெரிய வந்தது. கொரியர் வாகனம் என்றால்  போலீஸ் சோதனையில் இருந்து  தப்பி விடலாம் என்ற எண்ணத்தில் இவ்வாறு கடத்தியதாக தெரிவித்தனர். இது தொடர்பாக சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த அழகுபாண்டி  மகன் அசோக் (30)  அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் விஜயகுமார்(27) ஈரோடு பகுதியை சேர்ந்த நவரத்தன் மகன் லட்சுமணன் (23) ஈரோடு பெருமாள் பாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் ரமேஷ் குமார் (34) ஈரோடு திங்களூர் கோழிப்பண்ணை வீதி பகுதியை சேர்ந்த செத்தான்சிங்  மகன் செஸ்வந்சிங் (25) ஆகியோரை  போலீசார் கைது செய்தனர்….

The post ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் சிக்கியது கொரியர் வாகனத்தில் 1200 கிலோ குட்கா கடத்தல்-5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: