மலேசியா, அபுதாபியில் இருந்து விமானங்களில் கடத்தி வந்த ரூ.1.67 கோடி தங்கம் பறிமுதல்

தாம்பரம்: வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமான நிலைய சுங்க அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், மலேசியாவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள், சோதனை நடத்தினர். அப்போது மலேசிய ஆண் பயணி ஒருவரை சந்தேகத்தின்படி சோதித்ததில், அவர் தங்க செயின்கள் மற்றும் வளையல்களை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அவற்றை கைப்பற்றினர். அவற்றின் மொத்த எடை 710 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூ.44.53 லட்சம். இதையடுத்து அவரை கைது செய்து, தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மற்றொரு தனியார் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. இதில் மலேசியாவை சேர்ந்த சுமார் 35 வயது பெண் பயணி உடமைகளுக்குள் 900 கிராம் தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.56.38 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள், அந்த மலேசிய பெண் பயணியை கைது செய்தனர்.

இதேபோல், அபுதாபியில் இருந்து ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் ஒரு கிலோ 56 கிராம் எடையுடைய தங்கப்பசை அடங்கிய 4 பார்சல்களை, விமான நிலைய சுங்கச் சோதனை பகுதியில் விட்டுவிட்டு, மாயமானார். அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.66.23 லட்சம்.

இதை தொடர்ந்து, தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், தப்பிய கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள், ஒரே நாள் இரவில் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.67 கோடி மதிப்புடைய 2.66 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, மலேசிய பெண் பயணி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு, தங்கத்தை போட்டு விட்டு தப்பி ஓடிய மற்றொரு பயணியை சுங்க அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

The post மலேசியா, அபுதாபியில் இருந்து விமானங்களில் கடத்தி வந்த ரூ.1.67 கோடி தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: