அரசின் நடைமுறை சிக்கல் காரணமாக 27 மணல் குவாரிகள் திறப்பதில் இழுபறி: மணல் தட்டுப்பாட்டால் கட்டுமான பணிகள் பாதிப்பு

சென்னை: அரசின் அனுமதி கிடைத்தும் டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் 27 மணல் குவாரிகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் 15 மணல் குவாரிகள் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது. ஒரு நாளைக்கு 45 ஆயிரம் லோடு தேவைப்படும் நிலையில், தற்போது தினமும் 3 ஆயிரம் லோடு மணல் மட்டுமே பெறப்படுகிறது. இதை பயன்படுத்தி கொண்டு சிலர் மணல் ஒரு லோடு ரூ.40 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்கின்றனர். விலை அதிகம் என்பதால் மக்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் தமிழகத்தில் கட்டுமான பணிகள் முற்றிலுமாக முடங்கி போய் உள்ளது.

இதனால், தமிழகத்தில் புதிதாக தஞ்சாவூர், நாமக்கல், திருச்சி, கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக குவாரிகள் அமைக்கப்படுகிறது. தற்போது 27 குவாரிகளுக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழு அனுமதி அளித்துள்ளது. 18 குவாரிகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. இந்த நிலையில், அந்த குவாரிகளில் இருந்து மணல் அள்ளுவதற்கான டெண்டர்  பொதுப்பணித்துறை சார்பில் விடப்பட்டது. ஆனால், டெண்டரில் குறைவான மதிப்பு நிர்ணயித்ததால் கான்டிராக்டர்கள் டெண்டர் எடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, மணல் குவாரிகளில் இருந்து மணல் எடுத்து டிப்போவிற்கு கொண்டு செல்வதற்கான டெண்டர் பல முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டெண்டர் விடுவதற்கு பல நாட்கள் தாமதம் ஏற்பட்டதால் பல குவாரிகள் அனுமதி கிடைத்தும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குவாரிகள் ஒப்புதல் பெறவும் ஐஏஎஸ் அதிகாரிக்கும், அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலேயே புதிய குவாரிகளை திறப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, மணல் குவாரி டெண்டர் விட ஒப்பந்தம் நிறுவனம் தேர்வு செய்தால் மட்டுமே குவாரிகள் திறக்க முடியும். எனவே, தான், 27 குவாரிகளுக்கு படிப்படியாக டெண்டர் விட்டு, ஒப்பந்தம் தேர்வு செய்யப்படவுள்ளது.

இதற்கான நடைமுறை பெரிய அளவில் இருப்பதால் அனுமதி கிடைத்தும் குவாரியை திறக்க 30 நாட்கள் ஆகி விடுகிறது. அதன்பிறகு தான் குவாரிகளை திறக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது டெண்டர் விடப்பட்டுள்ள மணல் குவாரிகளில் ஒவ்வொன்றாக படிப்படியாக ஆகஸ்ட் மாதத்திற்குள் திறக்கப்படும்’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: